அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவுக்கு பத்திரமாக வந்தடைந்ததாக இந்தியாவிடம் பனாமா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பனாமா, கோஸ்டா ரிகா & நிகராகுவாவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க அரசு, பனாமாவுக்கு நாடு கடத்திய 299 சட்டவிரோத குடியேறிகளில் இந்தியாவைச் சேரந்த குழுவினரும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் பத்திரமாக பனாமா வந்தடைந்தனர். இதுகுறித்து தகவல் உரிய முறையில் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. பனாமாவில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான வசதிகளை செய்து தர தூதரகம் ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளது.
எனினும், எத்தனை இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் அவர்களின் விவரங்கள் குறித்து இந்திய தூதரகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. பனாமா அதிபர் சம்மதம் தெரிவித்த பிறகு அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் 3 விமானங்களில் அந்த நாட்டுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்க்ப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர். எந்தவித ஆவணங்களுமின்றி பனாமாவில் தரையிறங்கியுள்ள 299 பேரில் 171 பேர் மட்டுமே தங்களது சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது