நியூயார்க்: பனாமா, கவுதமாலாவை தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை தற்காலிகமாக ஏற்றுக்கொள்ள கோஸ்டா ரிகா முன்வந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டெனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே அமெரிக்க அரசு திருப்பி அனுப்பி வருகிறது.
அமெரிக்காவின் இந்த நாடு கடத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளான பனாமாவும் கவுதமாலாவும் சமீபத்தில் அமெரிக்க அரசிடம் தெரிவித்தன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் சமீபத்திய லத்தீன் அமெரிக்க பயணத்தில் இந்த நாடுகள் ஒப்புதல் அளித்தன.
இதையடுத்து சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 119 பேருடன் முதல் விமானம் கடந்த வாரம் பனாமா சென்றது.
இந்நிலையில் பனாமா, கவுதமாலாவை தொடர்ந்து கோஸ்டாரிகாவும் நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேறிகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கோஸ்டா ரிகா அதிபர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “200 சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிக்க கோஸ்டா ரிகா அரசு
ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து மத்திய ஆசியா மற்றும் இந்தியாவை சேர்ந்த சுமார் 200 பேர் புதன்கிழமை (இன்று) கோஸ்டாரிகா வருகின்றனர்.
இவர்கள் பனாமா எல்லைக்கு அருகில் உள்ள தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அதன் பிறகு அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 300-க்கும் மேற்பட்டோரை கடந்த 5-ம் தேதி முதல் அமெரிக்க அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இவர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.