லக்னோ: மகா கும்பமேளாவின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தி உள்ளார்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த திருவிழா 45 நாட்கள் நடைபெற உள்ளது. 34-வது நாளான நேற்று சுமார் ஒரு கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அவர்களையும் சேர்த்து இதுவரை 51 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர்.
இந்த சூழலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மகா கும்பமேளாவில் இதுவரை 51 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக உத்தர பிரதேச அரசு தரப்பு கூறுகிறது. ஆனால் சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் இடத்தில் போதுமான வசதிகள் இல்லை. இதை சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்ககூடும் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கையை உத்தர பிரதேச அரசு குறைத்து காட்டுகிறது.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 30 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பு கூறுகிறது. இந்த விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு உண்மையை மறைக்கிறது.
நாளுக்கு நாள் மகா கும்பமேளாவில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. சுமார் 20 கி.மீ. தொலைவு வரை பக்தர்கள் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் முதியோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். ரயில் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கிறது.
பக்தர்களின் நலன் கருதி மகா கும்பமேளா கால அவகாசத்தை உத்தர பிரதேச அரசு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.