இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரை விடுவித்தனர் ஹமாஸ் தீவிரவாதிகள்


இஸ்ரேல் பிணைக் கைதிகள் மேலும் 3 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று விடுவித்தனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இடையே கடந்த மாதம் 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்ரேலில் இருந்து பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை பகுதி, பகுதியாக விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் தெரிவித்தனர். ஒரு சில பிணைக் கைதிகளுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் கூறியது.

இஸ்ரேல் பிணைக் கைதிகள் மூன்று, மூன்று பேராக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி, பிணைக் கைதிகள் விடுவிப்பை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் பிணைக் கைதிகளை இரண்டு, மூன்று பேராக விடுவி்க்காமல், அனைவரும் இன்று மதியம் 12 மணிக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவிக்காவிட்டால், காசா நரகமாக மாறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தார். பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதலை தொடங்க இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிடப்படும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அறிவித்தார்.

இந்நிலையில் 3 பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர். இஸ்ரேல்-அர்ஜென்டினா குடியுரிமை பெற்ற லயர் ஹார்ன் (46), அமெரிக்க-இஸ்ரேல் குடியுரிமை பெற்ற சாகி டேகல் (36), இஸ்ரேல்- ரஷ்ய குடியுரிமை பெற்ற சாஷா ட்ருபானாவ் (29) ஆகியோர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைப்பது இது 6-வது முறை. இது வரை 21 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக 730 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. இந்நிலையில் மேலும் 369 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கிறது. இவர்களில் 36 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்

x