* இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வானொலி நிலையங்கள் மத்திய அரசின் பிரசார் பாரதி மூலம் செயல்படும் வானொலி நிலையங்களே! இவை தவிர, தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பண்பலை வானொலி நிலையங்களும் (FM) உள்ளன.
* 1923ஆம் ஆண்டு பம்பாய் வானொலி கிளப் நாட்டிலேயே முதல் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
* இந்திய ஒலிபரப்பு நிறுவனம் (The Indian Broadcasting Company) 1927ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் இது ஒலிபரப்பு செய்யப்பட்டது.
* 1936ஆம் ஆண்டு மத்திய அரசின் தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வானொலி அலைவரிசை நிறுவப்பட்டது. தற்போது தன்னாட்சி வழங்கப்பட்டு, பிரசார் பாரதியின் ஓர் அங்கமாக இது இயங்கிவருகிறது.
* 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 6 வானொலி நிலையங்களும் 18 டிரான்ஸ்மிட்டர்களும் செயல்பட்டு வந்தன. அப்போது 2.5 சதவீத நிலப்பரப்பில் இருக்கும் மக்களுக்கே வானொலி சேவை சென்றுகொண்டிருந்தது.
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 2.25 லட்சம் வானொலிப் பெட்டிகளே இருந்தன. இன்று 11 கோடிக்கும் அதிகமான வானொலிப் பெட்டிகள் பயன்படுத்தப்படு கின்றன.
* வியாபார நோக்கில் ‘விவித்பாரதி’ என்கிற சேவையை அகில இந்திய வானொலி 1957ஆம் ஆண்டு தொடங்கியது.
* 1977ஆம் ஆண்டு பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.
* 1997ஆம் ஆண்டு டிஜிட்டல் ரேடியோ பிராட்காஸ்டிங் சேவை தொடங்கப்பட்டது. ‘ரேடியோ ஆன் டிமாண்ட் சர்வீஸ்’ இணையதள சேவையும் தொடங்கப்பட்டது.
* 1998ஆம் ஆண்டு ‘நியூஸ் அண்டு டெலிபோன்’ என்கிற தொலைபேசி வாயிலாகச் செய்திகளை அறிந்துகொள்ளும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாக அகில இந்திய வானொலி திகழ்கிறது.
* இன்று நாடு முழுவதும் 591 ஒலிபரப்பு மையங்களைக் கொண்டுள்ளது அகில இந்திய வானொலி. இதன் மூலம் வானொலி சேவை 92 சதவீத நிலப்பரப்புக்குச் சென்றடைந்திருக்கிறது. 98 சதவீதம் மக்கள் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள்.
* வெளிவிவகார சேவைகள் பிரிவின்கீழ் நிகழ்ச்சிகள் 11 இந்திய மொழிகளிலும் 16 வெளிநாட்டு மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சென்றடைந்திருக்கின்றன. இந்தியாவின் முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதற்கும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்கும் இவை சேவையாற்றி வருகின்றன. - ஸ்நேகா
| இன்று - பிப்.13 - உலக வானொலி நாள் |