பருவ நிலை மாற்றத்தால் நோய் தாக்கம் அதிகரிப்பு: ஓசூர் பகுதியில் பீன்ஸ் மகசூல் பாதிப்பு


தேன்கனிக்கோட்டை அருகே பஞ்சாக் சிபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நோய் தாக்கிய பீன்ஸ் கொடியில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

ஓசூர்: பருவநிலை மாற்றத்தால் நோய் தாக்கம் ஏற்பட்டு ஓசூர் பகுதியில் பீன்ஸ் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சாகுபடி தொடர்பாகத் தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுகிய கால காய்கறி பயிர்களான பீன்ஸ், முட்டை கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களைச் சொட்டுநீர் பாசன முறையில் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆயிரம் ஏக்கரில் சாகுபடி: குறிப்பாக, இப்பகுதிகளில், 1,000 ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடையாகும் பீன்ஸ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள, கர்நாடக மாநில சந்தைகளுக்கு விற்பனைக்குச் செல்கிறது.

இதனிடையே, பீன்ஸ் சாகுபடி தொடர்பான உரிய பயிற்சியின்மை மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால், பல விவசாயிகள் தரம் இல்லாத விதைகளைத் தேர்வு செய்ததால், மகசூல் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தற்போதைய பருவ நிலை மாற்றத்தால் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நுகர்வு அதிகரிப்பு:

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் நல்ல மண் வளம் காரணமாகக் குளிர்ந்த பிரதேசங்களில் சாகுபடி செய்யப்படும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை இங்கு சாகுபடி செய்து வருகிறோம்.

பீன்ஸ் சாகுபடியைப் பொருத்தவரை ஒரு ஏக்கரில் சொட்டு நீர்ப் பாசன கட்டமைப்பு, கொடிக்கான பந்தல் அமைப்பு என ரூ.1.லட்சம் வரையில் செலவு ஏற்படுகிறது. துரித உணவங்களுக்கு பீன்ஸ் நுகர்வு அதிகரித்து இருப்பதால், சந்தையில் ஆண்டு முழுவதும் பீன்ஸுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

தரமில்லாத விதை தேர்வு: விலையைப் பொறுத்த வரையில், சந்தைக்கு வரத்து மற்றும் நுகர்வு தேவை அடிப்படையில் குறைந்தபட்சம் ஒரு கிலோ ரூ.60 முதல் அதிகபட்சம் ரூ.200 வரையில் விற்பனையாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரூ.80 விற்பனையான பீன்ஸ், தற்போது, மகசூல் பாதிப்பால் வரத்து குறைந்து ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது.

பீன்ஸ் சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்குச் சரியாக வழிகாட்டுதல் இல்லை. இதனால், பல விவசாயிகள் தரமில்லாத விதைகளைத் தேர்வு செய்ததால், மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தால் நோய் தாக்கம் ஏற்பட்டு, தரமில்லாத காய்கள் கிடைக்கிறது.

சாகுபடி தொடர்பான ஆலோசனை மற்றும் நோய்த் தாக்கத்திலிருந்து கொடிகளைக் காக்கத் தோட்டக்கலைத் துறை மூலம் உரிய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நுண்ணூட்ட உரமிட அறிவுரை: தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதத்தில் எப்போதும் இல்லாத அளவு ஏற்பட்ட வெப்ப அலை மற்றும் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால் பீன்ஸ் கொடியில் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நோய்த் தாக்குதலுக்கு உள்ளான கொடிகளைப் பராமரித்துப் பாதுகாக்க தேவையான நுண்ணூட்ட உரமிட வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். தற்போதைய பருவ மாற்றத்தால் பீன்ஸ் 10 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.