செல்போன் கோபுரத்தை அகற்றுங்கள் - செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்!


வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் குட்டையில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டு ஒராண்டு ஆகியும், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் குட்டை வகைப்பாடு கொண்ட நிலத்தில், தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் டவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 14.2.2023-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்; ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

மீண்டும் 17.3.2023-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து வண்டலூர் வருவாய் ஆய்வாளர், வண்டலூர் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, செல்போன் டவர் அமைக்கப்பட்ட இடம் குட்டை வகைப்பாடு நிலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதி இல்லை என்றும், அந்த செல்போன் டவரை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் அந்த குட்டை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அவர்கள்தான் செல்போன் டவரை அகற்ற வேண்டும் என வட்டாட்சியர் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், தங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஆட்சியரின் உத்தரவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் அவரிடமே கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது

பாரிவள்ளல்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த, பாரிவள்ளல் என்பவர் கூறியதாவது: குட்டை வகைப்பாடு கொண்டுள்ள நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரை அகற்றக்கோரி நாங்கள் ஓராண்டுக்கு மேலாக பல்வேறு நிலை அலுவலரிடம் புகார் மனு வழங்கிவிட்டோம். ஆனால், நடவடிக்கை இல்லை. ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.

அதிகாரிகள் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சொல்வதிலேயே இருக்கின்றனர். செல்போன் டவர் நிறுவனத்துக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். புகார் கூறும் எங்களை அலைகழிப்பது தெளிவாக தெரிகிறது. மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீர் நிலை என வகைப்படுத்தப்பட்ட குட்டை பகுதி என்று தெரிந்தும் செல்போன் டவர் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு செல்போன் டவரை அகற்றுவதோடு, நீர் நிலையில் செல்போன் டவர் அமைக்க அனுமதி கொடுத்த சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து மீண்டும் டிச.9-ம் தேதி மனு அளித்திருக்கிறோம்.

இதுமட்டுமின்றி, செல்போன் டவர் அமைந்துள்ள அரசு நிலத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக மின் இணைப்பு வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரியத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தீர்வு கிடைக்கவில்லை எனில் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x