சேலம்: சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைவாசலில், வசிஷ்ட நதியின் குறுக்கே அமைந்துள்ள பாலத்திலும், தலைவாசல் பேருந்து நிலையத்தை ஒட்டிய இரண்டு சர்வீஸ் ரோடுகளிலும் மின் விளக்குள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒவ்வொரு நொடியும் விபத்து அச்சத்துடனே கடந்து செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
எனவே, மின் விளக்குகள் அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்துக்கு, மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய அழுத்தம் தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள தலைவாசல், வட்டாரத் தலைநகராக இருக்கிறது. எனவே, சுற்று வட்டாரத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அலுவலகம், மருத்துவம், கல்வி உள்பட பல தேவைகளுக்காக, தினமும் தலை வாசல் வந்து செல்கின்றனர்.
இதேபோல், தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி சந்தைக்கு, பல கிராமங்களில் இருந்தும், அண்டை மாவட்ட எல்லை கிராமங்களில் இருந்தும், விவசாயிகள் ஏராளமானோர், இரு சக்கர வாகனங்களில் காய்கறிகளை தினமும் தலைவாசல் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைவாசல் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தினசரி காய்கறி சந்தை, பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு செல்வதற்கு, வசிஷ்ட நதியின் மறுகரைக்கு மக்கள் செல்ல வேண்டும். ஆனால், மக்கள் வசிஷ்ட நதியின் கரைக்கு செல்ல தனி பாலம் கிடையாது.
சென்னை- சேலம் 4 வழிச்சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களே உள்ளன. இதில், சேலம் சாலைக்கான பாலத்தில் மட்டுமே, பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனி பாதை உள்ளது. சென்னை சாலைக்கான குறுகிய பாலத்தில் பாதசாரிகளுக்கு வழி இல்லை.
இருப்பினும், மக்கள் விபத்து அச்சத்துடனேயே, பாலத்தைக் கடந்து சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனங்களுக்கும் தனி பாதை ஏதும் இல்லை. பகலிலேயே விபத்து அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில், பாலங்களில் மின் விளக்குகள் ஏதும் இல்லை.
இது குறித்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கூறியது வசிஷ்ட நதியின் மீதுள்ள இரு பாலங்களிலும் மின் விளக்குகள் இல்லை. இதன் காரணமாக, இரவு நேரத்தில் இருளடைந்த குறுகிய பாலத்தின் வழியாக மக்கள் செல்லும்போது, பாலத்தில் செல்லும் அதிவேக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அதிலும், பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களுக்காக கனரக வாகனங்கள், கார்கள் போன்றவை சற்று ஒதுங்கினாலும் ஆற்றினுள் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.
மேலும் பாலங்களின் ஓரங்களில் பிரதிபலிப்பான்கள், தடுப்புச் சுவர்களில் ஒளிரும் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் போன்றவை இல்லாமல் இருப்பதால், விபத்துக்கான இடமாகவே இரு பாலங்களும் காணப்படுகின்றன.
இதனால், பாலத்தை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் மக்கள், உயிர் பாதுகாக்க திகிலுடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதேபோல், தலைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு சர்வீஸ் ரோடுகளிலும், மின் விளக்குகள் இல்லாமல் இருளடைந்து இருப்பதால், சர்வீஸ் ரோட்டில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும் செல்லும் மக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது.
எனவே, வசிஷ்ட நதி மீதுள்ள பாலத்திலும், சர்வீஸ் ரோடுகளிலும் மின் விளக்குகள் அமைப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு பாதுகாப்பான வழி கிடைத்திடச் செய்ய வேண்டும், என்றனர்.