அஞ்செட்டி அருகே மலைக் கிராம மக்களுக்கு ‘எட்டாக்கனி’யாகும் அரசு திட்டங்கள்!


ஓசூர்: அஞ்செட்டி அருகே கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மலை கிராம மக்களுக்கு அரசுத் திட்டங்கள் எட்டாக்கனியாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் அஞ்செட்டி வட்டம் நாட்றாம்பாளையம் ஊராட்சி உள்ளது.

இந்த ஊராட்சியில் அட்டபள்ளம், பூந்தோட்டபள்ளம், பத்திகவுண்டனூர், ஏத்தகிணறு, அத்திமரத்தூர், கோம்பைக்காடு, சேசுராஜபுரம் உள்ளிட்ட 38 சிற்றூர்கள் உள்ளன. இக்கிராமங்கள் பெரும்பாலும் வனப்பகுதியையொட்டி உள்ளது. கல்வி அறிவில் மிகவும் பின் தங்கியுள்ள மலைக் கிராம மக்களுக்கு அரசு திட்டங்கள் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், இம்மலைக் கிராம மக்களுக்கு அரசு திட்டங்கள் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக இப்பகுதி மக்கள் வீடுகளின்றி பழைய குடிசை வீடுகளில் வசிப்பதோடு, இக்கிராமங்களில் சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆதிவாசிகள்போல வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கிருஷ்ணகிரி வந்து செல்ல அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வழியாக சுமார் 90 கிமீ தூரம் செல்ல வேண்டும். அல்லது ஒகேனக்கல் பென்னாகரம் வழியாக 110 கிமீ தூரம் பயணம் செய்யும் நிலையுள்ளது.

போதிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமான பூமரத்துப்பள்ளம் - அட்டப்பள்ளம்
சாலையில் இருசக்கர வாகனத்தை இயக்க போராடும் இளைஞர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஆனந்த் உள்ளிட்ட சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் எல்லையில் நாட்றாம்பாளையம் ஊராட்சி உள்ளது. இக்கிராமத்துக்கு அரசு அதிகாரிகள் வந்து மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்ப்பதில்லை. இதனால், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் இம்மக்களுக்கு இன்றளவும் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக ஒரே குடிசை வீட்டில் வசிக்கின்றனர்.

கிராம சாலைகள் பழுதடைந்த நிலையில், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் கோரி, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பது வேதனையாக உள்ளது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள இக்கிராம மக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கவும், மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

x