புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கல்மரங்கள் கண்டறியப்படுவதால், அவற்றை முறையாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செங்கீரை யூகலிப்டஸ் காட்டில் நீரோட்ட வாய்க்காலின் குறுக்கே கல்மரம் (புதைபடிவ மரம்) இருப்பதை மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் எம்.ஜீவிதா தலைமையிலான மாணவர்கள் குழு கடந்த மாதம் கண்டறிந்தது.
இந்தக் கல்மரத்தை திருச்சி தேசிய கல்லூரியின் மண்ணியல் துறைத் தலைவர் என்.ஜவஹர்ராஜ், பேராசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் அண்மையில் ஆய்வு செய்தனர்.
ஆய்வு குறித்து என்.ஜவஹர்ராஜ் கூறியதாவது: செங்கீரை காட்டில் வாய்க்காலின் குறுக்கே கல்மரத்தின் ஒரு பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது. மற்ற இரு பகுதிகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அதன் முழு நீளம் தெரியவில்லை. இக்கல்மரமானது ‘கடலூர் சாண்ட்ஸ்டோன்' எனும் பாறையில் புதையுண்டுள்ளது. இந்தப் பாறை 2.58 கோடியில் இருந்து 15.99 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் சேர்ந்ததாக இருக்கலாம்.
இதற்கு முன் இம்மாவட்டத்தில் நரிமேடு பகுதியில் இருவேறு இடங்களில் சிறிய அளவில் கல்மர துண்டுகள் கண்டெக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள அகல் கிராமம் உள்ளிட்ட இடங்களில் கல்மரங்கள் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் அடுத்தடுத்து கல்மரங்கள் கண்டெடுக்கப்படுவதால், இவற்றை முறையாக பாதுகாப்பதுடன், மாவட்டத்தில் வேறு எங்கும் கல் மரங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.
கல்மரங்கள் உருவாவது எப்படி? - இதுகுறித்து ஆய்வாளர்கள் மேலும் கூறும்போது, ‘‘பூகம்பங்கள் ஏற்படும்போதும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போதும் வண்டல் மண்ணில் மரங்கள் புதையும்போது, அவற்றுக்குள் ஆக்சிஜன் ஊடுருவல் தடுக்கப்படும். இதனால், புதைந்துள்ள மரங்கள் சிதையாமல் இருக்கும். மேலும், மரங்களின் வழியே செல்லும் நீரானது மரங்களின் திசுக்களை சிதைக்கும். அப்போது, எஞ்சியுள்ள பகுதி கனிமங்களால் (சிலிக்கா) நிரப்பப்படும். இது பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கல்மரமாக உருவாகும்.
மரத்தின் விட்டம், ஆண்டு வளையங்களை ஆய்வு செய்தால், அம்மரம் உயிருடன் இருந்த காலத்தில், அவற்றின் உயரம், உற்பத்தித் திறன், சுற்றுச்சூழல், காலநிலை, பரிணாமம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும். ஆகையால்தான் கல்மரங்கள் கடந்த காலத்தைப் பற்றி அறிவதற்கான பொக்கிஷமாக கருதப்படுகிறது’’ என்றனர்.