திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் பாழடைந்த நிலையில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது.
மலை மீது சுயம்பு மூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையை கிரிவலம் வருகின்றனர். மேலும், மலை கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலில் பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோயிலில், வெளிமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்வதற்காக இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தில் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் 8 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விடுதியை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சில மாதங்களிலேயே விடுதி அறையில் உள்ள குடிநீர் குழாய், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சேதமடைந்து பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், விடுதி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் மது அருந்துதல் உட்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக உள்ளூர் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், கிரிவலம் வரும் பெண் பக்தர்கள் அப்பகுதியை கடந்து செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதியை சீரமைத்து புதுப்பிப்பதற்காக கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, கோயில் நிர்வாகம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விடுதிகட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதால், அவற்றை புனரமைப்பதற்கு பதிலாக புதிய கட்டிடம் அமைத்தால் மட்டுமே பக்தர்கள் அச்சமின்றி பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்று உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கண்ணன் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் விடுதி அறைகளில் மின்சாரம், குடிநீர் குழாய், படுக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் இருந்தன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. விடுதி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மது அருந்தும் மையமாக மாறியுள்ளது. மேலும், தற்போதுள்ள விடுதி கட்டிடத்தின் மேற்கூரை மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சீரமைத்தாலும் மீணடும் சேதமடையும்.
இதனால், அரசு நிதியும் வீணாகும். எனவே, பழைய விடுதி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, அதே பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை அமைத்தால், பக்தர்கள் அச்சமின்றி தங்குவர். மேலும், திருக்கழுக்குன்றம் நகரில் பெரியளவில் விடுதிகள் இல்லாததால் கோயில் நிர்வாகம் சார்பில் விடுதி அமைக்கலாம்.
இதன்மூலம், வருவாய் மட்டு மின்றி பக்தர்கள் மிகவும் பயனடைவார்கள். இது தவிர, மலை கோயிலின் அடிவாரத்தில் பக்தர்களின் பொருட்களை வைப்பதற்கான அறைகள் அமைத்தால், வெளியூர் பக்தர்கள் பொருட்களை அங்கு வைத்துவிட்டு சிரமமின்றி கிரிவலம் வருவார்கள். அதனால், பொருட்கள் வைப்பு அறையை ஏற்படுத்த அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் வட்டாரங்கள் கூறியதாவது: வேதகிரீஸ்வரர்மலை கோயிலின் கிரிவலப்பாதையில் புதிய விடுதி கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றுவது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றன.