திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கனமழைக் காலங்களில் வெள்ளம் சூழும் பிரச்சினை 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுத்துறைகள், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
அரசியல் நெருக்கடிகளால் இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான கோப்புகள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்த 1992, 1997, 2023-ம் ஆண்டுகளில் மாநகரின் மையப்பகுதியிலுள்ள சந்திப்பு பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. தற்போதைய கனமழையின்போதும் பேருந்து நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் இப்பகுதியில் பேருந்து போக்குவரத்து, வியாபாரம் என்று இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இவ்வாறு தண்ணீர் தேங்குவதற்கு ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தெரிவித்திருக்கிறார். ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை, கடைகள் என்று இப்பகுதியிலுள்ள நீர்வழித்தடத்தில் மட்டும் 13 பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் இருப்பதை தன்னார்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அரசியல் அழுத்தம் காரணமாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள கோப்புகள் பலவும் கிடப்பில் போடப்பட்டு விட்டதால் மழைக் காலங்களில் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ். சுடலைகண்ணு கூறியதாவது:திருநெல்வேலி மாநகராட்சி சந்திப்பு பேருந்து நிலையத்தின் வடபுறம் சிந்துபூந்துறை வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் 1923-ம் ஆண்டு சர்வேயின்படி 50 அடி அகலமும், 720 மீட்டர் நீளமும் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நயினார் குளம் ஆயக்கட்டு 492 ஏக்கர் பாசன கழிவு நீர் மற்றும் சந்திப்பு பகுதிகளில் உள்ள மழைநீர், சந்திப்பு ரயில்வே நிலையத்தில் இருந்து வரும் மழைநீர் போன்றவை இந்த கால்வாய் வழியாகவே தாமிரபரணி ஆற்றில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் வணிக நோக்கத்தோடு கடைகள், ஹோட்டல்கள், மருத்துவமனை போன்றவற்றை கட்டி ஆக்கிரமித்துள்ளதனால் கடந்த 1992-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. அப்போதைய ஆட்சியர் ஆர்.வேலு, சார் ஆட்சியர் சுப்பிரியா சாகு ஆகியோர் முன்னிலையில் வாய்க்கால் ஓடை ஆக்கிரமிப்பை அன்றைய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மேற்பார்வையில் தற்காலிகமாக அகற்றி மழை வெள்ள நீர் வடிய வைக்கப்பட்டது.
இதனால் திருநெல்வேலி சந்திப்பு வியாபரிகள், சிந்துபூந்துறை மக்கள் வெள்ள பகுதியில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தன. கடந்த 1997-ல் பெய்த அடைமழை காரணமாக சந்திப்பு பேருந்து நிலையத்தில் 7 அடி உயரம் தண்ணீர் தேங்கி 4 நாட்கள் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சியால் அப்பகுதியிலுள்ள வாய்க்கால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களின் பெயர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தின் அளவை குறிப்பிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் அரசியல் செல்வாக்கு காரணமாக மாநகராட்சி தீர்மானம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாமன்ற தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிட கடந்த 2009-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் முயற்சி மேற்கொண்டார்.
தமிழ்நாடு நில நிர்வாக ஆணையருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு இது சென்றது. அவரது உத்தரவின்பேரில் அப்போதைய நில நிர்வாக ஆணையாளர் பஷீர் அகமது , இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் அந்த உத்தரவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான கோப்புகள் கால் நூற்றாண்டு காலம் உறங்குவதால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்குவதும், அதனால் பாதிப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி நிர்வாகம், நில அளவை துறை இனியாவது அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயல்படுமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.