விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் பள்ளி விடுமுறை - அழுகிய லட்சக்கணக்கான முட்டைகள்!


குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தழுதாளி அரசு பள்ளியில், கிராம மக்கள் முன்னிலையில் அழுகிய முட்டைகளைச் சோதனை செய்யும் அதிகாரிகள்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 26-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இதற்கிடையே, திண்டிவனம் அருகே மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்க 1,000 முட்டைகள் கடந்த 10 நாட்களுக்கு முன் அனுப்பிவைக்கப்பட்டது.

பள்ளி திறக்கப்பட்ட சூழலில், தழுதாளி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க முதற்கட்டமாக சுமார் 200 முட்டைகளை எடுத்து சமைத்த போது கடும் துர்நாற்றம் வீசியது. முட்டை அழுகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வம் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்த, தொடர்ந்து சமைக்காமல் வைத்திருந்த மீதமுள்ள முட்டைகளை எடுத்து உடைத்து சோதனை செய்ய, முட்டைகள் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் முன்னிலையில் பள்ளிக்கு ஒதுக்குபுறமாக குழித்தோண்டி சமைத்த 200 முட்டைகள், சமைக்காமல் வைக்கப்பட்டிருந்த 790 முட்டைகள் என 990 அழுகிய முட்டைகளை மண்ணில் கொட்டி மூடினர்.

இது குறித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை நிர்வகிக்கும் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “தொடர்ந்து 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்ட முட்டைகள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படாமல் வெளியில் வைக்கப்பட்டதால் அவை அழுகி இருக்க வாய்ப்புண்டு. இதனை உணர்ந்து, அதனை அழிக்குமாறு சத்துணவு பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி தழுதாளி பள்ளி தவிர மற்றப் பள்ளிகளில் சத்துணவு பொறுப்பாளர்களால் முட்டைகள் அழிக்கப்பட்டன. இப்பள்ளியில் கவனக்குறைவாக விட்டதால் சமைக்கும்போது தெரியவந்து, அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,508 பள்ளிகளிலும் இவ்வாறு அழிக்கப்பட்ட முட்டைகளைக் கணக்கிட்டால், லட்சத்தைத் தாண்டுகிறது.

பெருமழையால் முட்டைகள் இப்படி முடங்கி கிடப்பதை அறிந்து முன்கூட்டியே, அதனை எடுத்து மழைகால முகாம்களுக்கு மடைமாற்றி விட்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த அளவுக்கு முட்டைகள் வீணாகாமல் போயிருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.

சத்துணவுக்காக கோடிக்கணக்கில் செலவிடும் அரசு, முட்டைகளை அழுகாமல் வைத்திருக்க பள்ளிகளுக்கு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டடத்தில் நடந்துள்ள இந்த இழப்பைத் தொடர்ந்து அக்கோரிக்கை மேலும் வலுத்து வருகிறது.

x