திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை முழு பயன்பாட்டுக்கு எப்போது வரும்?


திருப்பூர்: திருப்பூருக்கு பிரதமர் மோடி வருகை தந்து அடிக்கல் நாட்டிய இஎஸ்ஐ மருத்துவமனை, இன்று முழு பயன்பாட்டில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அ.சரவணன் கூறும்போது, “திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறக்கப்பட்டு 10 மாதங்களாகியும், போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதான சாலையில் ஆறாக பெருக்கெடுத்து துர்நாற்றத்துடன் ஓடும் சாக்கடை கழிவுநீரால், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆட்டோவில் சென்றால் ரூ.400 செலவாகிறது. நோயாளிகள், தொழிலாளர்கள் நலன் கருதி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 20 படுக்கைகள் மட்டுமே உள்ளதால், பெரும்பாலான உள்நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல், கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

புறநோயாளிகள் பகுதி, பிரசவ வார்டு, பெண்கள் பகுதி, பொது மருத்துவம், ரத்த பரிசோதனை, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் பொது மருத்துவம், கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் இருந்தபோதிலும், அதற்கான கருவிகள், மருத்துவர்கள், டெக்னிஷியன்கள் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால், இங்கு தொழிலாளர்கள் முழு சிகிச்சை எடுக்க முடிவதில்லை. தற்போது 50-க்கும் குறைவான மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவர்களும் விடுமுறை என சென்று விடுவதால், நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். திருப்பூரில் உழைக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பில் ரூ.81 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட 100 படுக்கைகள், 250 மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து வகையான சிகிச்சைகளை, திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்." என்றார். திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறும்போது, "திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கே அனைத்து தரப்பினரும் கடுமையாக போராடினோம். மக்களவைத் தேர்தலுக்காக மத்திய அரசு முழுமை பெறாமல் திறந்துவைத்தது. இன்றைக்கும் அந்த நிலை தொடர்கிறது. மருத்துவ உட்கட்டமைப்பு உள்ளிட்ட உரிய வசதிகள் இல்லை. இதுதொடர்பாக வரும் மக்களவை கூட்டத்தொடரில் பேசி, முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x