விருத்தாசலம்: இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பில் இருந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நெல், கரும்பு, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், உளுந்து, பச்சை பயறு, துவரை, நிலக்கடலை, எள், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, வாழை, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட வருடாந்திர தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் மற்றும் உணவு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்து உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மொத்த பயிர்க் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணமான பிரீமியத் தொகை காரீப், ராபி, சம்பா பருவ காலத் திற்கு ஏற்ப கட்டண விகிதம் மாறுபடும். இதன்படி சம்பா பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.36,500 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.348 ஆகும்.
வழக்கமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சம்பா பருவம். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை சரியாக பயிர் சாகுபடி சரிவர நடைபெறாததால், அக்டோபர் மாதத்தில் குறைந்த அளவே பயிர்க் காப்பீடு செய்யப்பட்டது. இதற்கான கால வரம்பு 15-ம் தேதி என்றிருந்த நிலையில் பயிர்க் காப்பீடு செலுத்துவதற்கான கால வரம்பை நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை செயலர் விவரங்களுடன் கடிதம் எழுதினார்.
இதையடுத்து கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுக் கான காலவரம்பு நீட்டித்த போதிலும், காப்பீடு செய்வதால் எந்த நன்மையும் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், “பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தி னால், காப்பீட்டு நிறுவனங்கள் தான் வளம் கொழிக்கின்றன. விவசாயிகளுக்கு இழப்பு தான் மிஞ்சுகிறது. அகில இந்திய அளவுக்கும் ஒரே மாதிரியான திட்டம் வகுத்துத்தான், மகசூல் இழப்பு அடிப்படையில் வழங்கப்படும் என்பது ஏற்கக் கூடியதல்ல.
மகசூலுக்கான கூடுதல் செலவினத்தை விவசாயிகள் எப்படி பெற முடியும்? இதனால் ஒவ்வொரு பகுதியிலும் மகசூல் பாதிப்பு, அதன் தட்பவெப்ப நிலைக்கு மாறுகின்றபோது, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தால் பயன் கிடைப்பதில்லை. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசின் பங்களிப்பு இல்லை.
மாநில அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து பிரீமியம் தொகைக்கு ஏற்றவாறு திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளதால், மாநில அரசும் இதில் போதிய முனைப்பு காட்டவில்லை. எனவே விவசாயிகளின் தட்பவெப்ப சூழலுக்கேற்ப சரியான திட்டத்தை காப்பீடு நிறுவனங்கள் தயார் செய்து, விவசாயிகளை காப்பீடு பிரீமியம் கோரினால் தான் இனிவரும் காலங்களில் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய முன்வருவர்” என்றார்.
வீராணம் ஏரி பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகி கூறுகையில், “பயிர்க் காப்பீடு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். குமராட்சி பகுதி விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து காப்பீட்டு பிரீமியம் செலுத்தி, மகசூல் முழுமையாக பாதித்த போதிலும் விவசாயிகளுக்கு இழப்பீடு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளை காப்பீடு செய்ய வலியுறுத்துமாறு எங்களைக் கேட்டுக் கொண்டதன் பேரில், விவசாயிகளை சந்திக்கச் சென்றால் அவர்கள் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
காப்பீட்டு கட்டணத்தை செலுத்தக் கோருவதில் காட்டுகின்ற அக்கறை, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது, காப்பீட்டுத் தொகை செலுத்த முன் வருவதில்லை. இதனால் விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வருவதில்லை. புள்ளியியல் துறைக்குச் சென்று விளக்கம் கோரினாலும் அவர்களும் பதிலளிக்க தயாராக இல்லை” என்றார்.
பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டாதது தொடர்பாக கடலூர் மாவட்ட பயிர்க்காப்பீடு மேலாளர் கதிரேசனிடம் கேட்டபோது, “பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு, அவர் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற சாகுபடி தொடர்பான 7 ஆண்டுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் சிறந்த 5 ஆண்டுகள் மகசூல் இழப்பை கணக்கீடு செய்து, புள்ளியியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி அதனடிப்படையில் காப்பீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டதில் ரூ.15.95 கோடி காப் பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 87 ஆயிரம் ஏக்கருக்கு பயிர்க் காப்பீடு செய்யப்பட் டுள்ளது” என்றார்.