மென்பொருள் குளறுபடியால் கூடுதலாக வருமான வரி பிடித்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி


சிவகங்கை: மென்பொருள் குளறுபடியால் ஊதியத்தில் கூடுதலான வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மூலம் ஊதியம், பணப் பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக தங்களது வருமான வரியை செலுத்தியதால், அந்த மாதத்தில் ஊதியமின்றி சிரமப்பட்டனர். இதைத் தவிர்க்க, ஒவ்வொரு ஆண்டுக்குரிய உத்தேச ஊதியம் கணக்கீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொகை, ஊதியத்துக்கான மென்பொருள் மூலமே பிடித்தம் செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் ஏற்கெனவே பிடித்தது போக மீதித் தொகை மட்டுமே பிடித்தம் செய்யப்படும். ஆனால், ஆசிரியர்கள் பலருக்கு செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையை விட கூடுதலாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த கூடுதல் தொகையை தாமதமாக வழங்குவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். வருமான வரியை சரியாக கணக்கீடு செய்து பிடித்தம் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஆரோக்கி யராஜ், செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: ஆசிரியர்கள் பலரிடம் நவம்பர் மாதத்திலேயே அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரி முழுவதும் பிடித்தம் செய்யப் பட்டுவிட்டது. ஆனாலும், தொடர்ந்து பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது.

இதுகுறித்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் கேட்டால், மென்பொருள் மூலம் பிடித்தம் செய்யப்படுவதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்கின்றனர். மேலும், கூடுதலாக பிடிக்கப்பட்ட தொகையை வருமானவரி ‘ரிட்டர்ன்ஸ்’ தாக்கல் செய்து, திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர்.

தேவையின்றி பணத்தை கூடுதலாக வசூலிப்பதால், அதை திரும்பப் பெற ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதுடன், சில மாதங்கள் கழித்தே தாமதமாக அந்த பணத்தை பெற முடிகிறது. தேவையற்ற இந்த நடைமுறையை நிறுத்த கருவூலத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x