உதகை: உதகையில் கேசினோ சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி பாதிப்புக்குள்ளாகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் உதகை நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உதகை நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதற்கு மத்தியில் தினசரி சுமார் 10,000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், முக்கிய சாலைகள் மட்டுமின்றி, நகரில் உள்ள மற்ற சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஹில்காப் எனப்படும் சிறப்பு பிரிவு போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இருபுறம் வாகனங்கள் நிறுத்தம்: இந்நிலையில், உதகையில் கேசினோ சந்திப்பு பகுதியில் இருந்து தமிழகம் ஹோட்டல், பிரிக்ஸ் பள்ளி, எம்எல்ஏ அலுவலகம் வழியாக ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தேவைப்படும் சமயங்களில் ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அந்த அளவுக்கு வாகன போக்குவரத்து அந்த வழித்தடத்தில் அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில், உதகை பிரிக்ஸ் பள்ளி அருகில் உள்ள ஒய்பிஏ அரங்கத்தில் திருமணம் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த அரங்கில் வாகனங்கள் நிறுத்த போதுமான அளவு இடம் இல்லாததால், இந்த சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க கமர்சியல் சாலையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால், அந்த சாலையில் உள்ள கடை உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை பிரிக்ஸ் பள்ளி சாலையில் நிறுத்தி விடுகின்றனர். இந்த சாலை வழியாக அரசு மருத்துவமனையிலிருந்து மகப்பேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. வாகன நெரிசலில் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன.
நேற்று இந்த அரங்கில் நடந்த நிகழ்ச்சி காரணமாக சாலையில் நிறத்தப்பட்ட வாகனங்களால் ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. 5 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக போக்குவரத்து நெரிசலில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வெளியில் வந்து மருத்துவமனைக்கு சென்றது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உதகையைப் பொறுத்தவரை வாகனங்கள் நிறுத்த முறையான இடம் கிடையாது. எனவே, இருக்கும் இடத்தில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதற்காக முக்கிய சாலைகளில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தாமல் ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
ஒய்பிஏ அரங்கில் நிகழ்ச்சி நடக்கும் சமயங்களில் எல்லாம் இந்த சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடத்தில் பள்ளி இருப்பதால் மாணவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.