மதுரை: பெண் மண்டலத் தலைவர்கள் உள்ள 3 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், அவரது கணவர்களின் தலையீடு நிர்வாகத் தில் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் கடந்த காலத்தில் நான்கு மண்டல அலுவலகங்கள் மட்டுமே இருந்தன.
வார்டுகள் எண்ணிக்கை 72-ல் இருந்து 100 ஆக உயர்ந்த பிறகு, தற்போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி ஆகிய ஐந்து மண்டல அலுவலகங்கள் உள் ளன. இவற்றில் மண்டலம்-1 (கிழக்கு), மண்டலம்-2(வடக்கு), மண்டலம்-3 (மத்தியம்), மண்டலம்-5 (மேற்கு) ஆகிய நான்கு மண்டலங்களிலும் பெண் மண்டலத் தலைவர்களே உள்ளனர்.
மண்டலம்-1-ல்(கிழக்கு) வாசுகி, மண்டலம்-2-ல்(வடக்கு) சரவண புவனேஷ்வரி, மண்டலம்-3-ல்(மத்தியம்) பாண்டிச்செல்வி, மண்டலம்-5-ல்(மேற்கு) சுவிதா ஆகிய பெண்கள் தலைவர்கள் உள்ளனர். மண்டலம்-4-ல் (தெற்கு) மட்டுமே ஒரே ஒரு ஆண் மண்டலத் தலைவராக முகேஷ்சர்மா உள்ளார். 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களும், ஆண்களைப் போல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காகவே, பெண் தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த அடிப்படையிலே மதுரை மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 52 பெண் கவுன்சிலர்கள், 48 ஆண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேயராக இந்திராணியும், மண்டலத் தலைவர்கள் பதவிகளில் 4 பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி மாநகராட்சி நிர்வாக பதவிகளில் பெண்கள் ஆதிக்கம் அதிகம் இருந்தும், அவர்களது கணவர்களே அதிகாரம் செலுத்துகின்றனர், நிர்வாக முடிவுகளை எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு, பெண் மண்டலத் தலைவர்கள் உள்ள 4 மண்டல அலுவலங்களில் ஒரு மண்டல அலுவலகத்தை தவிர மீதமுள்ள 3 மண்டல அலுவலகங்களில், பெண் தலைவர்களின் கணவர்களே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள். வார்டு பணிகள், நிதி ஒதுக்கீடு, நிர்வாக அனுமதி உட்பட அனைத்து பணிகளிலும் இந்த 3 மண்டல அலுவலகங்களில் கணவர்கள் கூறுவதையே பெண் மண்டலத் தலைவர்கள் கேட்டு நடப்பதாகவும், சில மண்டல அலுவலகங்களில் பெண் மண்டலத் தலைவர்கள் கணவர்கள் நேரடியாக மண்டல அலுவலகத்துக்கே வந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மூன்று மண்டலத் தலைவர்கள் மீது திமுக கட்சி மேலிடத்துக்கும், நகராட்சி நிர்வாக இயக்குனரகத்துக்கும் புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. அது தொடர்பான விசாரணையும் ரகசியமாக நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மண்டல அலுவலகங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்டல அலுவலக அலுவலர்கள் எதிர் பார்க்கிறார்கள்.