திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுமார் 16 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். பனியன் தொழிலை நம்பி 65 சதவீதம் பேர் வாழ்ந்து வரும் தொழில் நகரம். உரிய ஆர்டர், தொய்வில்லாத வேலைவாய்ப்பு கிடைத்தால் மட்டுமே மக்களின் கையில் பணப்புழக்கம் இருக்கும். தொழில் நிறுவனங்களில் தொய்வு ஏற்பட்டால், அது குடும்பங்களின் சமையலறை வரை எதிரொலிக்கும்.
இன்றைக்கு மாநகராட்சியின் வரி கட்டணத்தை எதிர்த்து, அனைத்துக் கட்சிகளும் ஒற்றைக்குடையின் கீழ் ஒன்று சேர்ந்திருப்பது, தமிழ்நாடு அளவில் அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. சொத்துவரிக்கு எதிராக இன்று (டிச. 3) அதிமுக கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டமும், நாளை (டிச.4) தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சியின் மூத்த கவுன்சிலர்கள் சிலர் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் வரி உயர்வுக்கு எதிராக வெளிநடப்பு மற்றும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொண்டுவந்துள்ளோம். 2022-ம் ஆண்டு வரி மறுசீராய்வு செய்து, தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீதமும், வீடுகளுக்கு 25 சதவீதமும் உயர்த்தியதை கடுமையாக எதிர்த்தோம். இந்நிலையில், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வு என, தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்ததுடன், உள்ளாட்சி அமைப்புகளில் விவாதத்துக்கு கொண்டுவராமல்போனது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
அதேபோல், கோவை உட்பட மற்ற ஊர்களில் இல்லாத நடை முறை இங்கு பின்பற்றப்படுகிறது. குப்பை வரி உயர்வால் பலரும் செலுத்தாமல் வைத்திருந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் குப்பை வரியை தொழில் நிறுவனங்களில் கணக்கிட்டு தற்போது வசூலிக்கிறார்கள். 6 முதல் 7 ஆண்டுகள் என்ற சூழலில், பலருக்கும் குப்பை வரி பல மடங்கு உயர்ந்திருக்கும். கோவை மாநகராட்சியில் இப்படியொரு நடைமுறை இல்லை.
திருப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்பு, அதையொட்டிய குடிசைத்தொழில்போல் பின்னலாடைத் தொழில் சார்ந்த தொழில்கள் இருக்கும். சில இடங்களில் வணிக பயன்பாட்டுக்கான இடங்களை காரணம்காட்டி, மொத்தமாக வரி விதிக்கிறார்கள்.
பழைய கட்டிடங்களை அளந்து, இன்றுள்ள புதிய வரி, தவணை வரி, 13 அரையாண்டுகளுக்கான காலியிட வரி, அபராதம் என பல்வேறு வகைகளில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. இன்றைக்கு அரசுகளின் தொழில் கொள்கையால் தொழில் நிலைமை மிக மோசமாகி கொண்டிருக்கிறது. சொத்துவரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற வரிவிதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்” என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சியில் புதிய வரிகள் எதுவும் போடவில்லை. வரி விதிப்பை சரிபார்க்கிறோம். மாநகரில் கட்டிட அளவு மாற்றம், குடியிருப்பு மாற்றம் இருந்தால் மாற்றப்படுகிறது. 2017-ம் ஆண்டு முதல் குப்பை வரி கணக்கிடாமல் விடப்பட்டுள்ளது. மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான குப்பை வரி உயர்வை, 2017-ம் ஆண்டு முதல் வசூலிப்பதுதான் குற்றம் சொல்ல காரணம்.
திருப்பூர் மாநகராட்சியில் குறிப்பிட்ட காலம் குப்பை வரி வசூலிக்காமல் விட்டுவிட்டனர். மற்ற ஊர்களில் அவ்வப்போது உயர்த்தி வசூலித்துள்ளனர். ஒரு மனையை பதிவு செய்துவிட்டு, 10 முதல் 15 ஆண்டுகள் வரி கட்டாமல் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குதான் ஆறரை ஆண்டுகளுக்கு காலியிட வரி போடுகிறோம்” என்றனர்.