திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் நிலங்களில் சட்ட விரோதமாக நடைபெறும் மண் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். நில அளவையர்களை கொண்டு மண் அள்ளப்படும் நிலங்களை அளக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதவாளம் ஊராட்சியில் பாட்டைசாரதி அம்மன் கோயில் அருகே தொடங்கி, பார்சனாப்பல்லி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பராஜபாளையம் கிராமம் வரை வனத்துறையினருக்கு சொந்தமான மலையடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக மொரம்பு மண் கடத்தப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மொரம்பு மண் கடத்தப்படுவதால் இயற்கை வளம் கொள்ளை போவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘‘ஆம்பூர் வட்டம் பாலாற்று படுகையில் தினசரி மணல் டன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதனால், பாலாறு பாழாகி விட்டது. இதற்கிடையே, மொரம்பு மண் தனியார் நிலங்களில் அதிக அளவில் கடத்தப்படுகிறது. ஒரு பகுதிகளில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரிந்தும், சில பகுதிகளில் அனுமதியில்லாமலேயே மொரம்பு மண் கடத்தப்படுகிறது.
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டுமான பணிக்காக மண் எடுப்பதாக கூறி லாரிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) என அந்த லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கனிம வளம் ஆம்பூரில் திருடப்படுகிறது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மொரம்பு மண் கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு கிராமங்கள் வழியாக ஆம்பூருக்கு டிப்பர் லாரிகள் அதிக அளவு எடையுடன் மண் கொண்டு செல்வதால் பல கிராமங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் இந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனிம வளம் கொள்ளை போவதோடு மட்டும் அல்லாமல் பழமை வாய்ந்த சாலைகளும் சேதமடைந்து வருவது பெரும் வேதனையளிக்கிறது. தனியார் ‘பொக்லைன்’ உள்ளிட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ஆழத்துக்கு மொரம்பு மண் அள்ளப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங் களான காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளன. வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்துவது குறைவு என்பதால் வனப்
பகுதி ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் அதிக அளவு ஆழத்தில் மண் அள்ளப்படுகிறது. இதனால், உயரத்திலிருந்து வன விலங்குகள் பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலையும், சில நேரங்களில் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மண் கடத்தல் கும்பலின் அராஜகம் தினசரி அதிகரிக்க தொடங்கிவிட்டது.
கடும் சட்ட நடவடிக்கை: திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கதவாளம், பார்ச்சனப்பல்லி கிராமங்களில் திடீர் ஆய்வு நடத்தி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் மண் அள்ளும் கும்பல் மீது கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வருவாய் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.
விவசாயம் செய்ய உகந்த நிலமாக விவசாய நிலத்தை மாற்றுவதற்காக அனுமதி பெற்று மண் அள்ளுவதாக கூறினாலும், மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் பெரும் கற்களை போட்டு மூடுகின்றனர். கற்கள் இருந்தால் விவசாயம் எப்படி? செய்ய முடியும். இதை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். விவசாயத்துக்கு உகந்த நிலமாக மாற்றுவது எனக் கூறுவது வெறும் கண்துடைப்பு நாடகம். ஆகவே, மாவட்ட நிர்வாகம் கனிம வளம் கொள்ளை போவதை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
மேலும், பட்டா நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதியின்பேரில் மண் அள்ளுவதாக கூறினாலும், 1.5 மீட்டர் அளவு ஆழம் மட்டுமே மண் அள்ளி நிலத்தை சீர் செய்ய வேண்டும். இது தான் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1.5 மீட்டர் அளவு ஆழத்தை காட்டிலும் அதிக அளவு மண் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளதை வருவாய் துறையினர் ஏன்? ஆய்வு செய்ய முன் வரவில்லை.
எனவே, நில அளவையர்கள் மூலம் கனிம வளம், வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மண் அள்ளப்படும் தனியார் நிலத்தை அளவீடு மற்றும் ஆய்வு செய்ய வேண்டும். விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி கூறும்போது, ‘‘ தனி நபருக்கு சொந்தமான அந்த பட்டா நிலத்தை சீர் செய்து, விவசாயத்துக்கு உகந்த நிலமாக மாற்றுவதற்காக மண் எடுப்பதற்கு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி அனுதி கோரி தனி நபர் மனு அளித்திருந்தார். அதன்பேரில், வருவாய் கோட்டாட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அங்கு ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு கூறுகையில், ‘‘மொரம்புமண் அள்ளப்படும் தனியார் நிலத்துக்கு அருகாமையில் இருப்பது வருவாய் துறைக்கு சொந்தமான மலையாகும். அதற்கு அடுத்தப்படியாக தான் காப்புக்காடுகள் உள்ளன. எனவே, வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் மண் எடுக்க வாய்ப்பில்லை’’ என்றார்.