புதுச்சேரி மக்களிடம் ஆன்லைன் வழியே 11 மாதங்களில் ரூ.60 கோடி மோசடி!


‘ஹலோ சார்.. ஹலோ மேடம்.. ஒரு 2 நிமிஷம் பேசலாமா?’ என்ற அழைப்பு, நம்மில் பலரது மொபைல் போனுக்கும் நிச்சயமாக வந்திருக்கும். இவ்வாறு அழைக்கும் நபர்கள், குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வாங்கித் தருகிறோம். பகுதி நேர வேலை வாய்ப்புகள் உள்ளன; வீட்டில் இருந்தபடியே அதிகளவில் சம்பாதிக்கலாம். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம் என்றெல்லாம் படபட என்று பேசுவார்கள்.

அவசர தேவைக்காக அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டால், அதுதொடர்பான தகவல்களும் அடுத்த சில நிமிடங்களில் உங்கள் மொபைல் போனை வந்தடையும். பதமாக பேசி, இதமாக காய் நகர்த்தும் இவர்கள், சம்பந்தப்பட்ட நபரின் வேலை, ஊதியம், குடும்பம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்திருப்பார்கள். அவர்களின் பேச்சை நம்பி, ‘ஆன்லைன் ஜாப்’, உடனடி கடனுதவி, வெளிநாட்டு வேலை என்றுசிக்கி, பணத்தைஇழந்து வருவோர் புதுச்சேரியில் அதிகமாகி வருகின்றனர்.

இதில் புதிதாக ஒரு மிரட்டல் சேர்ந்திருக்கிறது. “நாங்கள் மும்பை சைபர் க்ரைம் போலீஸார் பேசுகிறோம். உங்கள் பெயரில் வந்துள்ள பார்சலில் போதைப் பொருட்கள் உள்ளன. இதன் பேரில் உங்களை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (ஆன்லைன் வழியாகவே கைது செய்வார்களாம்.) செய்கிறோம்” என்று மிரட்டுகிறார்கள். மிரட்டலுக்கு பணிந்தவர்களை அடுத்தடுத்து போன் கால் செய்து, ‘வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்டத் தொகையைத் தாருங்கள்’ என்று மிரட்டி, பணத்தை கறக்கிறார்கள்.

குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, ’கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை புதுப்பித்து தருகிறோம்’ எனக்கூறி வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு, ஓடிபி எண்களை வாங்கி, பணத்தை அபேஸ் செய்கிறார்கள். டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக, ‘நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கை முடித்தால் அதிக பணம் தருகிறோம்’ என்று சொல்லி பணத்தை சுருட்டுகிறார்கள்.

போலி விளம்பரங்களை செய்து பணம் பறிப்பது, போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றுவது என நாள் தோறும் புதிய புதிய கோணங்களில் இணையவழி மோசடிகள் நடக்கின்றன. தமிழகத்துடன் ஒப்பிடும் போது புதுச்சேரியில் இவ்வாறு ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.

புதுச்சேரியில் இம்மாதிரியான ஆன்லைன் மோசடி வழக்குகளை எதிர்கொள்ள, சைபர் க்ரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் மோசடிகள், ஆன்லைன் வழியான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என மொத்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 நவம்பர் முதல் டிசம்பர் வரை 37 வழக்குகளும், 2023-ல் 123 வழக்குகளும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆன்லைன் மோசடி தொடர்பாக மட்டும் 111 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் 22 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆன்லைன் மோசடியில் கடந்த 11 மாதங்களில் மட்டும் ரூ.60 கோடி அளவில் பொதுமக்களின் பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. இதில் 10 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.10 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது.\

இதுபற்றி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு, “நாள் தோறும் குறைந்தது 10 பேராவது ஆன்லைன் வழியே ஏமாற்றப்படுகின்றனர். சராசரியாக 10 ஆண்கள் ஏமாறினால், 2 பெண்கள் ஏமாறுகின்றனர். ஆன்லைன் மோசடியில் குற்றவாளி களை கண்டுபிடிப்பது எங்களுக்கு சவாலான விஷயமாக உள்ளது. இணைய வழியில் வரும் எதையும் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என பலமுறை சைபர் க்ரைம் போலீஸார் தரப்பில் இருந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

ஆனாலும், அறியாமையால் இந்த மோசடி தொடரவே செய்கிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதால் மட்டுமே இந்த மோசடிக் கும்பலை ஒழிக்கலாம். பாதிக்கப்படும் நபர்கள் எந்தவித அச்சமும் இன்றி, உடனே புகார் தர வேண்டும். தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையம் அல்லது 1930 என்ற எண் மூலம் இணையவழி காவல் நிலையத்துக்கு ஆன்லைனில் புகார் செய்யலாம்” என்று தெரிவிக்கின்றனர்.

x