கோவை: கோவை தண்ணீர் பந்தல் சாலையில், ரயில்வே கேட் மூடப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் பாலம் கட்டும் பணி முடியாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையின் இணைப்புச் சாலையாக தண்ணீர் பந்தல் சாலை உள்ளது.
ஹோப்காலேஜ் சந்திப்பிலிருந்து தொடங்கும் தண்ணீர்பந்தல் சாலை வழியாக டைடல் பார்க் அருகேயுள்ள ரயில்வே தண்ட வாளத்தை கடந்தால் சரவணம்பட்டி காவல் நிலைய சோதனைச் சாவடி வழியாக சத்தி சாலையை அடையலாம். மேலும், சேரன் மாநகர், இந்து மாநகர், ஜீவா நகர், கணபதி மாநகர், விஐபி நகர், விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், காளப்பட்டி பிரிவுக்கும் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால், வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ரயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2006-ல் முடிவு செய்யப்பட்டது.
549.19 மீட்டர் தூரத்துக்கு 8.5 மீட்டர் அகலத்தில் ரயில்வே பாலமும், அதையொட்டி சர்வீஸ் சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரயில்வே துறையின் சார்பில் தண்டவாள பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் எந்த பணிகளும் இதுவரை நடைபெற வில்லை.
இதுகுறித்து விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட் டாளர் பாலசுப்பிரமணி்யன் கூறும்போது, ‘‘தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள ரயில்வே கேட் தினமும் 50 முறைக்கு மேல் மூடப்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2010-க்குள் பாலம் கட்டப்பட்டு விடும் எனக் கூறப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவில்லை.
2016-ல் ரயில்வே கேட் மூடப்பட்டது. ரயில்வே துறை சார்பில், தண்டவாள பகுதியில் கடந்த 2018-ல் பாலம் கட்டப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால் பின்னர், நெடுஞ்சாலைத்துறையின் ஏறு, இறங்குதளங்கள் அமைக்கும் பணி, சேவைச் சாலை பணிகள் தாமதமாகின.
கிட்டத்தட்ட 50 உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சிலர் நீதிமன்றம் சென்றதால் பணிகள் தடைபட்டுள்ளன. 70 வருடங்களாக இச்சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு பாலம் கட்டப்படாமல் ரயில்வே கேட் மூடப்பட்டதால் மக்கள் டைடல் பார்க் சாலையை பயன்படுத்தி ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஹோப்காலேஜில் இருந்து நடந்து சென்று தண்டவாளத்தை கடந்து செல்லும் மக்களும் உள்ளனர். எனவே, இங்கு ரயில்வே மேம்பாலம் விரைவாக கட்ட வேண்டும். இல்லையெனில், ரயில்வே கேட்டை திறந்து வைக்க வேண்டும்.
இதற்கிடையே, இப்பாலப் பணியின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவில் விவரங்கள் கேட்டிருந்தேன். அதற்கு, ‘இங்கு மேம்பால தளங்கள், சேவைச்சாலைகள் அமைக்க நிலம் எடுப்புப் பணிகள் தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்மேம்பாலம் தொடர்பாக மேல்முறையீட்டு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வழக்குகள், நிலமெடுப்புப் பணிகள் முடிந்த பின்னர், பாலம் பணி தொடங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான பாலத்தை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.