நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய பாசன நீர்வழித்தடங்கள் ஆக்கிரமி்ப்பாளர்களால் மாயமாகி விட்டன. இதனால் கிராமப்புறங்களில் தண்ணீரின்றி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் பிரதான கால்வாயில் இருந்து கிராமப்புற வயல்கள், தோப்புகளுக்கு செல்லும் சிறிய கிளைக் கால்வாய்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலான கால்வாய்களை நிலத்துக்கு சொந்தமானவர்கள் தங்கள் இடத்தை தாண்டி செல்லவிடாமல் அழித்துவிட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் இன்று மாயமாகி விட்டன.
குறிப்பாக பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாயில் பேயன்குழியில் இருந்து தொடங்கும் கண்டன்விளை கிளைக் கால்வாய் 3 கி.மீ நீளம் கொண்டது. இதன் மூலம் 500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. பல்வேறு குளங்கள் தண்ணீர் பெறுவதோடு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதிலும் இக்கால்வாய் பெரும்பங்கு வகிக்கிறது.
இக்கால்வாயின் முதல் மதகு மூலம் கொல்லாய் குளம், நேரடி பாசனம் மூலம் பனங்காட்டு குளம், 2-வது மதகு மூலம் கடப்பாண்டி குளம், முன்னடி குளம், பூலன்குளம், காஞ்சிகுளம் போன்றவை பாசனம் பெறுகின்றன. 3-வது மதகின் மூலம் திருக்கைகுளம், 4-வது மதகு மூலம் பதர் குழிகுளம், பண்டாரவிளையில் உள்ள 5-வது மதகு மூலம் பாம்பாட்டிகுளம், சடச்சிகுளம், கருமாரிகுளம் போன்றவையும் பாசன வசதி பெறுகின்றன.
இதுபோல் இடைகட்டிகுளம், இலங்கியாகுளம், பண்டார குளம், பொட்டல் குளமும் பாசனம் பெற்று வந்தது. இந்நிலையில் பருத்தி விளையில் உள்ள மதகு, இடைகட்டிகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு செல்லும் 6-வது மதகு, கண்டன்விளை இறக்கம் பகுதியில் உள்ள மதகுகள் முற்றிலும் அடைபட்டு உள்ளன. இதனால், இதனை நம்பி உள்ள குளங்கள் நீர் செல்ல வழியின்றி அழியும் நிலையில் உள்ளன.
கண்டன்விளை கால்வாயானது பொட்டல் குளத்தில் சென்று முடியும். தற்போது இக்கால்வாயில் குறுக்கிடும் திங்கள்சந்தை சாலை அருகே கால்வாயை முற்றிலும் அடைத்து விட்டனர். கால்வாயை ஆக்கிரமிப்பாளர்கள் கபளீகரம் செய்துள்ளதால் கால்வாய் இருந்த சுவடே தெரியவில்லை.
இதனால் கடை வரம்பு பகுதிகளுக்கு நீர் செல்ல இயலாமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆக்கிரமிப்பு மற்றும் கால்வாய் அடைப்பு காரணமாக மழைக் காலங்களில் நீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர்
தேங்கிவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பல்வேறு நீர்வழி கால்வாய்கள் மூடப்பட்டு பாதைகள் ஆக்கப்பட்டு விட்டதால், தண்ணீர் செல்வதில் முழுமையாக தடங்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்துக்கும், நீர் ஆதாரத்துக்கும் முக்கியமாக திகழும் கண்டன்விளை கிளைக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, மதகுகளை சீரமைத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.