காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?


மதுரை: தமிழகத்தில் 20-க்கும் மேலான பல்கலைக்கழகங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பழமையானது. தென்மாவட்டம் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி துறைகளை விரும்பும் கல்வி நிறுவனம் இது. 2021 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு , அங்கீகார கவுன்சிலின் (நாக்) A++ அங்கீகாரத்தையும் பெற்றது. தொலைதூரக் கல்விப் படிப்புகளை வழங்குவதில் முன்மாதிரியாக இருந்தது. தற்போது இப்பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க ரூ. 10.50 கோடி மாதந்தோறும் தேவை. இந்த நிதியை திரட்ட முடியாத சூழலில் பல்கலைக்கழக நிர்வாகம் திணறுகிறது. இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. எனினும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து பேராசிரியர்கள் சிலர் கூறியது: சில ஆண்டாகவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பல்கலைக்கழக நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கிடைக்கவில்லை. ஓரிரு மாதம் தாமதமாகவே வழங்கும் சூழல் உள்ளது.

வருவாய் குறைந்து, நிலையான வைப்பு நிதி இல்லாமலே போய்விட்டது. செலவுகளும் அதிகரித்துள் ளன. வைப்புத்தொகையாக ரூ.220 கோடி வரை இருந்த காலமும் உண்டு. இந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்ததன் மூலம் கிடைத்த வட்டியில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

மார்ச் 2005-ல் பல்கலைக்கழக ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 447 ஆக இருந்த நிலையி்ல், 2021-ல் 1,185 ஆக அதிகரித்துள்ளது. ஓய்வு பெறுவோருக்குரிய பணப்பலன்களை வழங்க 2004 முதல் 2012 வரையிலான காலத்தில் உபரி நிதியில் ரூ.221 கோடி ‘பென்ஷன் கார்பஸ்’ நிதி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

2005-ல் 477 ஓய்வூதியர்களுக்கு மாதம் ஓய்வூதியமாக ரூ.29,73,298 வழங்கி நிலையில், தற்போது, ரூ. 5 கோடிக்கு மேல் தேவை இருக்கிறது. தற்போது ஓய்வூதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து சுமார் ரூ.6 கோடியை தாண்டியது. வைப்பு நிதியும் இல்லை, வட்டியும் இல்லை. ஆனால் செலவு பல மடங்கு உயர்வு என்ற நிலையில் சமாளிக்க வழியின்றி பல்கலைக்கழக நிர்வாகம் திணறுகிறது.

பல்கலைக்கழக தரப்பில் கூறியதாவது: தொலைதூரக் கல்விக்கான சிறந்த இடமாக இருந்த இப்பல்கலைக்கழகத்தின் கொள்கை மாற்றத்தால், கடந்த 10 ஆண்டாகவே தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் மாணவர் சேர்க்கை 50 ஆயிரத்தில் இருந்து வெகுவாகக் குறைந்தது. இது பல்கலைக்கழக ஆண்டு வருவாயில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊதியம் மட்டுமின்றி மாதாந்திரச் செலவுகளையே சமாளிக்க முடியவில்லை.

தொலை நிலைக்கல்விக்கான அதிகார வரம்பு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களாகச் சுருங்கியது. நிதி தணிக்கை ஆட்சேபனைகள் பல ஆண்டாக தீர்க்கப்படாமல் இருப்பதால் மானியமும் பெற முடியவில்லை. நிதியை அதிகரிக்க பல வாய்ப்புகள் இருந்தாலும், அதை செயல்படுத்த துணைவேந்தர் இல்லை. தமிழக அரசுதான் சிறப்பு நிதியை வழங்கி காமராஜர் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

தரமான கல்விச்சூழல் உருவாகுமா? - பல்கலைக்கழக ஆண்டு செலவு ரூ.120 கோடி. ஆனால் வருவாய் வரவு ரூ.50கோடி வரை கிடைக்கிறது. சில தணிக்கை ஆட்சேபனையால் பல்கலைக்கழகத்துக்கான மானிய நிதியை பெற முடியவில்லை. மேலும், வழக்குகளுக்கும் அதிகம் செலவிடுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகண்டு தரமான கல்வி, உயர்தர ஆராய்ச்சிக்கான சூழலை உருவாக்க வேண்டும் என பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

x