விழுப்புரம் மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் - முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா?


விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகிற 28, 29-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய வருகை தர உள்ளார். முதல்வர் வருகை தர உள்ள சூழலில், மாவட்ட மக்கள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து, தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகள், மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, அவர்கள் முன்வைத்தது: விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ‘ரிங் ரோடு’ திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், நவீன கலையரங்கம் அமைக்க வேண்டும். விழுப்புரம் - புதுச்சேரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசு இடம் ஒதுக்கித் தந்தால் பரிசீலனை செய்யலாம் என தெற்கு ரயில்வே தங்கள் தரப்பில் இருந்து முன்னரே தெரிவித்திருந்தது. அதன்படி இடம் ஒதுக்கித் தர வேண்டும். கிடப்பில் உள்ள திண்டிவனம் - செஞ்சி- திருவண்ணாமலை புதிய ரயில்வே திட்டத்தை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

திண்டிவனம் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திண்டிவனம் - வானுார் இடையே உள்ள எறையானுார் கிராமத்தில், அரசு வேளாண் கல்லுாரி அமைக்க வேண்டும். ஆவணிப்பூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தென்புத்துார் - தளவாளப்பட்டு இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

விக்கிரவாண்டி பகுதியில், அரசு தொழிற்பயிற்சி மையம், சிப்காட் தொழிற்சாலை அமைத்திட வேண்டும். விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. நீண்ட நாளாக உள்ள இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்..

முண்டியம்பாக்க்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செஞ்சி, திருக்கோவிலூர் பகுதி மக்கள்தடையின்றி செல்ல ஏதுவாக முண்டியம் பாக்கம் - ஒரத்தூர் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். செஞ்சி அருகில் உள்ள பாக்கம் - கெங்கவரம் பகுதியில் வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து அறிவிக்க வேண்டும். விழுப்புரத்தில் உள்ள பழைய நகராட்சி அலுவகத்தில் டவுன் ஹால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரக்காணம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) அமைக்க வேண்டும். மீனவ மக்கள் பயனடைய மரக்காணம் பேரூராட்சி அழகன்குப்பம் முதல், புத்துப்பட்டு ஊராட்சி முதலியார்குப்பம் வரை கடற்கரையில், துாண்டில் வளைவு அமைக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக வானுார் ஒன்றிய பகுதியை இரண்டாக பிரித்து, கிளியனுாரை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். வளர்ந்து வரும் திருச்சிற்றம்பலம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

செஞ்சிக் கோட்டையை முக்கிய சுற்றுலா மையமாக அறிவித்து, கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும். செஞ்சி 'பி' ஏரி மற்றும் செஞ்சிக் கோட்டை செட்டிகுளத்தில் படகு சவாரி திட்டம் அறிவிக்கப்பட்டு, கிடப்பில் உள்ளது; அதைக் கொண்டு வர வேண்டும். செஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக செஞ்சி தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது.

தற்போது நான்கு மடங்கு மக்கள் தொகை பெருகி, நகர எல்லை விரிவடைந்துள்ளது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக திமுக வசம் உள்ள இந்தப் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். நம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேல்மலையனூரை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேல்மலையனுாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொடங்க வேண்டும்.

கண்டாச்சிபுரம் மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். ரெட்டணை அல்லது பெரியதச்சூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் சவுக்கு அதிகளவில் பயிரிடப்படுவதால், காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக நம் மாவட்ட மக்கள் வைத்து வரும் கோரிக்கைகளை நினைவுகூர்ந்து பட்டியலிடுகின்றனர்.

இத்திட்டங்களின் சாதகங்கள், அதை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நம் மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே ஆராய்ந்து வைத்துள்ளது. முதல்வரின் களஆய்வு வருகைக்கு முன் முறையாக, அவரது பார்வைக்கு இவைகள் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில், மாநில அரசு, முதல்வர் வருகையின் போது, இவற்றில் சிலவற்றையேனும் அக்கறையோடு நிறைவேற்றும் என நம்புவோம்.

x