காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையத்தில் தாத்தி மேடு அருகே உள்ளது விஜலட்சுமி நகர். இந்த நகரில் கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர், சாலை வசதி மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமஜெயம் என்பவர் கூறியதாவது: விஜயலட்சுமி நகர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த நகரில் காஞ்சிபுரம் மக்கள் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்கள், வட இந்திய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குடியேறியுள்ளனர். பல்வேறு வீடுகளும் இந்தப் பகுதியில் கட்டப்பட்டுவிட்டன.
ஆனாலும் மாநகராட்சிக்கு அருகே இருக்கும் இந்தப் பகுதியின் தெருக்கள் 15 ஆண்டுகளாக மாநகராட்சியுடன் சேர்க்கப்படாமல் உள்ளன. இதனால் இந்தப் பகுதிக்கு குடிநீர் வசதி, சாலை வசதி எதுவும் இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்றுள்ளனர். வீட்டுமனைகளாக விற்ற பின்னர் தெருக்கள், பூங்காக்களுக்கு ஒதுக்கப்படும இடத்தை மாநகராட்சியிடம் அதன் உரிமையாளர் ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த நகரின் தெருக்கள் எல்லாம் தனியார் பெயரிலேயே உள்ளது. அதுபோல் தனியார் பெயரில் இருக்கும் இடத்துக்கு மாநகராட்சி மூலம் பணிகள் செய்ய முடியாது. இதனை மாநகராட்சிக்கு மாற்றுவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.