உருக்குலையும் தருணத்திலும் ரூ.538 கோடி வருவாய் ஈட்டிய என்எல்சி முதல் அனல்மின் நிலையம்!


முதல் அனல்மின் நிலையத்தின் முகப்பு.

தெற்காசியாவில் முதன்முறையாக நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்த பெருமை என்எல்சி முதல் அனல் மின் நிலையத்துக்கு உண்டு. சோவியத் ரஷ்யாவின் தொழில்நுட்பத்தில் உருவான இந்த அனல் மின்நிலையம் மணிக்கு 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தது. முன்னாள் பிரதமர் நேருவுடன் நெருக்கமாக இருந்த அப்போதைய முதல்வர் காமராஜர், தனது கடும் முயற்சியால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை உருவாக்கினார்.

சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த ‘டெக்னோ ப்ரேம் எக்ஸ்போர்ட்’ என்று நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் ரூ.78 கோடி மதிப்பீட்டில் அன்று என்எல்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. 23-05-1962 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் முதல் அனல் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் என்எல்சி நிர்வாகம் படிப்படியாக அனல்மின் நிலையப் பணியை விரிவுபடுத்தியதன் விளைவாக 1970-களில் முதல் அனல்மின் நிலையம் 9 யூனிட்டுகளுடன் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறனை பெற்றது. அப்போது அந்த மின்னுற்பத்தியில் 90 சதவீதத்தை தமிழகத்திற்கே வழங்கியது.

இந்த அனல்மின் நிலையத்தை நிர்மாணித்த ரஷ்ய நிறுவனம், முதல் அனல்மின் நிலையத்துக்கு அளித்த ஆயுட்காலம் 25 ஆண்டுகள். ஆனால் அதையும் தாண்டி மேலும் 15 ஆண்டுகள் ஆயுள் நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆயுள் நீட்டிப்புக்கு பின்னரும் 18 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த நிலையில், தரம் சார்ந்த ஆயுட் காலத்தைக் கருதி மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கடந்த 30.09.2020 அன்றுடன் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த அனல்மின் நிலையம் தொழிற்சாலை கழிவாக மாறியதால், அதனை அகற்ற தீர்மானித்த நிர்வாகம், ஏல முறையில் அனல்மின் நிலைய கழிவுகளை விற்றது. கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனம் ரூ.538 கோடிக்கு ஏலம் எடுத்து தற்போது கழிவுப் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. என்எல்சி முதல் அனல்மின் நிலையம் கடந்த 58 ஆண்டுகளாக இயங்கி, 3 தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு அளித்து சுமார் 4 ஆயிரம் மனிதத்திறன்களைப் பயன்படுத்தி 32 லட்சத்து 67 ஆயிரம் மணி நேரம் இயங்கி, 18 ஆயிரத்து 540 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

உடைக்கப்படும் முதல் அனல் மின் நிலைய நீர் குளிரூட்டும் கோபுரம்.

2003-04 ஆண்டுகளில் 347 நாட்கள் தொடர்ந்து இயங்கி 440 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. தனது இயக்க காலத்தில் 11 முறை மின் உற்பத்திக்கான தேசிய விருது பெற்ற இந்த அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் இதன் ஆயுட் காலம் முடிவதைக் கண்டு, உணர்ச்சியோடு கண் கலங்குவதை காண முடிகிறது. “தொழில் செய்யும் இடமும் ஒரு கோயில்’ என்பார்கள். அது உண்மை என்பதை இந்த அனல்மின் நிலையம் மூலம் உணர்கிறேன். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்நாளின் பாதி நாட்களின் சுவாசம் இங்கு தான் கழிந்திருக்கிறது.

கா.வெற்றிவேல்

எனக்கு வாழ்வளித்தது மட்டுமின்றி ஒரு தொழிற்சங்த் தலைவனாகவும் அடையாளம் காட்டியது இந்த அனல் மின் நிலையம் தான். எனது பெற்றோருக்கு பிறகு நான் வணங்கும் இடம் இதுதான்” என்கிறார் தொழிற்சங்கத் தலைவரும், முதல் அனல்மின் நிலையத் தொழிலாளியுமான க.வெற்றிவேல் “பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து மொத்த தமிழகத்துக்கே ஒளி வெள்ளம் பாய்ச்சிய பெருமை என்எல்சி முதல் அனல் மின் நிலையத்ததுக்கு உண்டு. நான் இங்கு ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி, பின்னர் பணி நிரந்தரமானேன்.

எனது தந்தை 25 ஆண்டுகள் இங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்றார். நானும் இங்கு 25 ஆண்டுகள் பணி முடிந்து ஓய்வு காலத்தை நெருங்கி விட்டேன். இந்த அனல்மின் நிலையம் வாயிலாக பல மொழிகள், பல மதங்களைக் கடந்த மனித நேயத்தை பார்த்திருக்கிறேன். பொறியாளர்களுக்கு பயிற்சிக் களமாகவும், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதிலும் பெரும்பங்காற்றிய முதல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்” என்கிறார் எஸ்.சுரேஷ்குமார் என்ற தொழிலாளி.

சுரேஷ்குமார்

இவரைப் போல இங்கு பணியாற்றிய பலர் கடந்த சில மாதங்களில் உணர்வு வயப்பட்டு பேசுவதை நாம் காண முடிகிறது. காலங்கள் மாறி காட்சிகள்மாறி எங்கெங்கோ எது எதுவோ நடக்கின்றன. பணி சார் சூழல்களால் ஏற்படும் நெருக்கடியால் பணியாளர்கள் மீதானபார்வையுமே மாறிக் கொண்டிருக்கிற அவசர கதி உலகம் இது. அதற்கு மத்தியில் தான் பணியாற்றிய பணியிடத்தின் மீதான காதல் கொண்டிருக்கும் வெற்றிவேல், சுரேஷ்குமார் போன்ற தொழிலாளர்களால் உயர்ந்து நிற்கிறது என்எல்சி இந்தியா நிறுவனம்.

தற்போது நெய்வேலியில்.. 420 மெகா வாட் திறன் உள்ள முதல் அனல்மின் நிலையம் விரிவாக்கம், 1,470 மெகா வாட் திறன் உள்ள 2-ம் அனல் மின்நிலையம், 500 மெகா வாட் திறன் உள்ள 2-ம் அனல் மின்நிலைய விரிவாக்கம், 1,000 மெகா வாட் திறன் உள்ள நெய்வேலி புது அனல் மின்நிலையம் ஆகியவை 3 சுரங்கங்களைக் கொண்டு 10 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு தற்போது இயங்கி வருகிறது.

x