திருப்புவனம்: போதிய வருமானம் இல்லாததால் திருப்புவனத்தில் வெற்றிலை விவசாயம் குறைந்து வருகிறது. வெற்றிலையை பயன்படுத்தி மூலிகைப் பொடி, குளிர்பானம் தயாரிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் புதூர், நைனார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் 200 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நாடு, கற்பூரம், சிறுகாணி போன்ற ரகங்கள் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலானோர் நாடு ரகத்தை தான் பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள் பலர் சொந்த நிலங்கள் இல்லாததால், குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். அதுவும் 5 முதல் 20 பேர் வரை இணைந்து சாகுபடி செய்கின்றனர். ஆடி பட்டத்தில் வேலி அமைத்து முதலில் அகத்தி விதைப்பர். 60 நாட்களில் ஆள் உயரத்துக்கு அகத்தி வளர்ந்ததும், வெற்றிலையை பதியமிடுவர். அகத்தியில் கொடி படர்ந்து 6 மாதங்களில் அறுவடை செய்யலாம். 30 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வெற்றிலையை பறிப்பர்.
அவற்றை திருப்புவனம் நெல்முடிக்கரை வெற்றிலை விவ சாயிகள் சங்கம், திருப்புவனம் புதூர் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் சங்கம் என இரு சங்கங்களுக்கு கொண்டு செல்வர். அங்கிருந்து மதுரை, மேலூர், சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பெங்களூரு, ஆக்ரா, புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், அண்மைக் காலமாக வெற்றிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தது, வெற்றிலை பயிரில் நோய் தாக்குதல் அதிகரிப்பு, தண்ணீர் பற்றாக்குறை, போதிய வருமானம் கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் பலர் வெற்றிலை விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். இதனால் வெற்றிலையை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம், திருப்புவனம் புதூர் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம் ஆகியோர் கூறியதாவது: கடந்த காலங்களில் திருப்புவனம், அதனை சுற்றிய பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் வெற்றிலை விவசாயம் நடைபெற்றது.
இந்த விவசாயத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். வருமானம் குறைந்ததால் விவசாயத்தை கைவிட்டு பலரும் கூலித் தொழிலுக்குச் செல்கின்றனர். வெற்றிலை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். வெற்றிலையை 3 ஆண்டுகளுக்கு பறிக்கலாம். சராசரியாக கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
திடீரென ரூ.40 வரை விலை சரிந்து பறிப்புக் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்படும். மூலிகையான வெற்றி லையை மதிப்புக்கூட்டி மேற்கு வங்க மாநிலத்தில் குளிர்பானமாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். கரோனா காலத்துக்கு பின்னர், டீ தூள் நிறுவனங்கள் வெற்றிலை பொடியை டீ தூளில் கலந்து பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்று மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதை அரசு ஊக்குவித்தால் வெற்றிலை விவசாயம் மீண்டும் எழுச்சி பெறும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். மேலும் வெற்றிலையை காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அகத்தி விதை, உரம் போன்றவற்றை மானியமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘உரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறோம். மேலும் அகத்தி விதைகளை மானியமாக வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்’ என்றனர்.