கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டப் பணிகளுக்கான நில ஆர்ஜித பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில் உள்கட்டமைப்பு கட்டுமான பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடப்பதால் இட நெருக்கடி பிரச்சினை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கோவை உள்ளிட்ட சுற்றுப்புற ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது கோவை விமான நிலையம். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக நில ஆர்ஜித பணிகள் முடங்கிய நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 95 சதவீத நிலங்கள் ஆர்ஜிதம் செய்து விமான நிலைய ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் தற்போது தினசரி 30 விமானங்களுக்கு மேல் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரம் பயணிகள் வரை தினமும் வந்து செல்கின்றனர். இதனால் இடநெருக்கடி பிரச்சினை அதிகரித்துள்ளது. மீதமுள்ள 5 சதவீத நிலம் ஒப்படைக்கும் வரை தற்போது வழங்கப்பட்டுள்ள நிலத்தில் புறப்பாடு பகுதி, ஓடுபாதை நீளம் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க விமான ஆணையக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இட நெருக்கடியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிலர் தாங்கள் பயணிக்க வேண்டிய விமானத்தை தவற விட வேண்டிய அவல நிலையும் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் காரணங்களை கூறுவதை தவிர்த்து கோவை விமான நிலையத்தை விரைவில் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.