திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட காவல்துறையும், வட்டார போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற ‘ஆன்மிக தலம்’ திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலம். 'மலையே மகேசன்' என போற்றி வணங்கி, திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
மேலும் விடுமுறை நாட்களிலும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாளில் தற்காலிக பேருந்து நிலையங்களில் பேருந்துகளும், பிற இடங்களில் கார்களும் நிறுத்தப்படுவதால், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதைக்கு ஆட்டோக்களில் பக்தர்கள் செல்கின்றனர்.
இதனால், திருவண்ணாமலை மாநகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பவுர்ணமி நாளில், வெளியூர்களில் இருந்தும் திருவண்ணாமலை மாநகருக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதன் எதிரொலியாக, மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு உள்ள சன்னதி தெருவில், பழைய நகராட்சி அலுவலகம் அருகே தடுப்புகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். இரும்பு தடுப்பின் இருபுறமும், 2 அடி அகலத்துக்கு பக்தர்கள் நடந்து செல்ல வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தை மறித்துக் கொண்டு, இரும்பு தடுப்பு முன்பு ஆட்டோக்களை வரிசையாக நிறுத்திக்கொண்டு, பக்தர்களுக்கு நேற்று இடையூறு ஏற்படுத்தினர். ஒரே இடத்தில் 50 ஆட்டோக்கள் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும்,உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் ஆட்டோக்களை தாறுமாறாக இயக்கப்பட்டதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் ஆட்டோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். பவுர்ணமி நாளில் சன்னதி தெரு மட்டுமின்றி அனைத்து வீதிகளையும் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன.
வீட்டில் இருப்பவர்கள் கூட வெளியே வர முடியாது. பக்தரக்ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சன்னதி தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை முறைப்படுத்த காவல்துறையினர் இல்லை. காவல்துறையினரின் அதிகாரம் என்பது, கற்பூரம் விற்பனை செய்பவர்களிடம் மட்டுமே பாய்கிறது. ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட காவல்துறையினர் முன்வர வேண்டும்.
பேருந்து மற்றும் கார்களை நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்குவது போல் வீதிகளில் ஆட்டோக்களை நிறுத்த(ஆட்டோ ஸ்டாண்ட் வாரியாக) இடத்தை தேர்வு செய்து ஒதுக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தை தவிற வேறு இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தினால், குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு ஆட்டோவை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், சாலையில் வேகமாக செல்வது, முந்தி செல்வது, திடீரென திருப்புவது போன்ற செயல்களும் அதிகளவில் உள்ளது. இவற்றையும் தடுக்க வேண்டும். காவல்துறையுடன், வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்” என்றனர்.