கோவை: வெளிச்சம் தராத தெருவிளக்குகளால் இருள் சூழ்ந்த திருச்சி சாலை!


குறைந்த வெளிச்சத்தில் எரியும் எல்இடி மின்விளக்குகளால் இருள் சூழ்ந்து காணப்படும் கோவை திருச்சி சாலை. | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: தொழில் நகரான கோவையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணபதி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, உக்கடம் வழியாக பொள்ளாச்சி, மதுக்கரை செல்லும் சாலைகளில் எப்போதும் வாகன நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது. நகர பகுதியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலையான கோவை - திருச்சி சாலை (என்.ஹெச்.181) முக்கியமானதாக உள்ளது. கோவை அரசு மருத்துவமனை சந்திப்பில் இருந்து ஒண்டிப்புதூர் வரை இந்த சாலையில் தினமும் முக்கிய நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. ஆனாலும் திருச்சி சாலையில் வாகன நெரிசல் தொடர்கிறது.

திருச்சி சாலையில் ராமநாதபுரம் சிக்னல் தொடங்கி சிங்காநல்லூர் சிக்னல் வரை பொருத்தப்பட்டுள்ள எல்இடி மின் விளக்குகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. மழைக் காலங்களில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் திருச்சி சாலையில் கூடுதலாக இரண்டு இடங்களில் ‘யு டர்ன்' அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் போதிய வெளிச்சம் இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும் ‘யு டர்ன்' குறித்த அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படாமல் இருப்பதால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதேபோல, சுங்கம்- உக்கடம் பைபாஸ் சாலையிலும் குறைவான வெளிச்சம் தரும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “திருச்சி சாலை மற்றும் சுங்கம்- உக்கடம் பைபாஸ் சாலையில் இரவு 10 மணி வரை வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இச்சாலைகளில் மின் விளக்குகள் இருந்த போதிலும் போதிய வெளிச்சம் இல்லை.

ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரிவதே இல்லை. எனவே, குறைவான வெளிச்சம் தரும் மின் விளக்குகளை உடனே மாற்றி, அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

x