திருக்காலிமேடு குளங்கள் தூர்வாரப்படுமா? தங்கள் பகுதியை புறக்கணிப்பதாக மக்கள் வேதனை


திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ள சின்ன வேப்பங்குளம்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 21-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் சின்ன வேப்பங்குளம் அமைந்துள்ளது. சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த குளம், ஆக்கிரமிப்புகளின் காரணத்தால் தற்போது 1.90 ஏக்கராக சுருங்கியுள்ளது. மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிவாசிகள் இக்குளத்தின் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் பொது மக்களும் குளத்தின் நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்த்தனர். எனினும், நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 2010-11 ஆண்டில் குளத்திலிருந்து உபரிநீர் வெளியேறி மஞ்சள் நீர் கால்வாயில் கலக்கும் வகையில், குளத்தின் தெற்கு பகுதியில் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் மஞ்சள் நீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சின்ன வேப்பங்குளத்தின் உபரிநீர் வெளியேறும் கால்வாயின் வழியாக குளத்தில் கழிவுநீர் கலந்தது.

இதனால், குளத்தின் நீர் முற்றிலும் மாசடைந்தது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் குளத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், குளத்திலிருந்து மீன்கள் செத்து மிதந்தன. இதேபோல், அடிக்கடி மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வு அரங்கேறியது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குளத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க சின்ன வேப்பங்குளம் மற்றும் 22-வது வார்டு பகுதியில் பெரிய வேப்பங்குளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்கமல்

இதுகுறித்து, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராஜ்கமல் கூறியதாவது: சத்தியநாதசுவாமி கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள பெரிய வேப்பங்குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும், குடியிருப்புகளின் கழிவுநீர் அனைத்தும் குளத்திலேயே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, புகார் தெரிவித்ததால் வருவாய்த்துறை சார்பில் பெயரளவுக்கு நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கைகள் இல்லை. குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்காக குளத்தின் உள்ளேயே கட்டிடங்கள் அமைத்து வருகின்றனர்.

இதனால், குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நின்று, மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், சின்ன வேப்பங்குளத்தின் நிலை அப்படியல்ல. குளத்தின் 4 கரைகளும் தெளிவாக தெரியும் அளவுக்கு உள்ளது. ஆனால், தூர்வாரி சீரமைக்கப்படாததால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. திருக்காலிமேடு பகுதியில் நீர் ஆதாரங்களை சீரமைக்க மாநராட்சி நிர்வாகம் ஏன் தயங்குகிறது என தெரியவில்லை என்றார்.

சுரேஷ்

இதுகுறித்து, திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலின் போது சின்ன வேப்பங்குளம் சீரமைக்கப்படும் என அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் அறிக்கையாக தெரிவித்தனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டால் அரசுக்கு திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக பதில் அளிக்கின்றனர் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: திருக்காலிமேடு பகுதியை புறக்கணிப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல. அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகள் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முறையான அறிவிப்புகள் வரும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

x