அபாயகரமாக தொங்கும் மின் வயர்கள் - சென்னை ஆட்டோ ஓட்டுநர் ‘நூதன’ பிரச்சாரம்


சென்னை: அபாயகரமாக தொங்கும் மின்வயர்களை சரி செய்யாத மின் வாரியத்தை கண்டித்து, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நூதன முறையில், ஆட்டோவில் விளம்பரம் செய்து வருகிறார்.

சென்னை தரமணி, எம்.ஜி.நகர், அண்ணா தெருவில் மின் கம்பங்கள் வழியாகச் செல்லும் மின்சார வயர்கள், அபாயகரமாக செல்கிறது. இந்த வயர் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழுந்து மக்களின் உயிரை குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும், அதன் மீது பல்வேறு வயர்கள் தாறுமாறாக சுற்றப்பட்டு பயமுறுத்துகிறது. இதனால், அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் தினந்தோறும் அஞ்சியபடியே கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து வேளச்சேரி மின்சார வாரியத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த தரமணியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகநாதன் என்பவர் இந்த விவகாரம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், பிரச்சினையை தீர்க்காத மின் வாரியத்தை கண்டிக்கும் வகையிலும் தனது ஆட்டோவில் நூதன முறையில் விளம்பரம் செய்துள்ளார்.

அவரது ஆட்டோவின் பின் பகுதியில், கரும்பலகை அமைத்து, அதில் ‘வேளச்சேரி மின்சார வாரியம் உறங்குகிறதா? தரமணி எம்.ஜி.நகர் அண்ணா தெருவில் சர்வீஸ் வயர் தாறுமாறாக தொங்குகிறது. ஏ.இ. அவர்களிடம் ஆர்.ஜெகநாதனாகிய நான் நேரில் பல தடவை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மின் நுகர்வோர் மையத்தில் 2 முறை புகார் அளித்தேன். நடவடிக்கை இல்லை. மின்சார வாரியத்தின் மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்கள் உயிரை காப்பாற்றுங்கள்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் ஆட்டோவில் ஏறும் பயணிகளை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதால் பயணிகள் மற்றும் பொது மக்கள் இந்த நூதன விளம்பரத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு, பிரச்சினையை தீர்க்காத மின்வாரியத்தை கண்டித்தும் வருகின்றனர். இதுகுறித்து, தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன்பாக, மின் வயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

x