கஸ்தூரிபாய் நகருக்குள் செல்ல வழிகாட்டுமா சென்னை மாநகராட்சி? - பெயர் பலகை இல்லாததால் குழப்பம்


கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் தெரு பெயரின் மீது சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதை காணலாம்.

சென்னை: சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரின் 175-வது வார்டில் 8 பிரதான சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றில் சிலவற்றுக்கு சுவரின் தெருக்களின் பெயர் எழுதப்பட்டுள்ளன. 2, 3, 4 மற்றும் 5-வது பிரதான சாலைகளில் பெயர் பலகைகளே இடம்பெறவில்லை. மாறாக சுவரில் பிரதான சாலையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவை அழிந்தும், சரியாக தெரியாத வகையிலும் தற்போது காணப்படுகின்றன.

குறிப்பாக 5-வது பிரதான சாலையின் முகப்பில் தெருவோர சுவரில் குறிப்பிடப்பட்டிருக்கும் தெருவின் பெயர் முற்றிலும் மறைந்து காணப்படுகிறது. சுவருக்கு முன்பு வளர்ந்துள்ள மரம் பிரதான சாலையின் பெயரை முற்றிலும் மறைத்து, அது எந்த தெரு என்பதையே அடையாளம் காட்ட மறுக்கிறது. அதேபோல், 3-வது பிரதான சாலையின் தொடக்கத்தில் சுவரில் குறிப்பிடப்பட்டுள்ள சாலையின் பெயர் மீது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, முழுவதுமாக மறைத்துவிட்டன.

இதுதொடர்பாக அடையாறு மண்டல மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “பெயர் பலகைகளை அனைத்து பகுதிகளிலும் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக மண்டல அளவில் ஒவ்வொரு தெருவாக சர்வே எடுக்கப்பட்டு, எங்கெங்கு பெயர் பலகைகள் புதிதாக வைக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுள்ளோம். கூடிய விரைவில் கஸ்தூரிபாய் நகரிலும் பெயர் பலகைகள் வைக்கப்படும். அதேநேரம் தெரு பெயர் பலகைகளில் நோட்டீஸ், சுவரொட்டிகள் போன்றவற்றை ஒட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

x