காஞ்சிபுரம்: குப்பைமேட்டில் கிடக்கும் கல்தூண்கள், சிலைகள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?


காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் கல்தூண்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் குப்பைமேட்டில் 50-க்கும் மேற்பட்ட கோயில் கல்தூண்கள், விநாயகர் சிலை, பிண்டி
கல்களால் ஆன தூண்கள் (மணல்கற்கள்), கல்தூண்களை இணைத்து மேல்தளத்தை உருவாக்க பயன்படுத்தப்படும் விதான கற்கள் போன்றவை கேட்பாரற்ற நிலையில் கிடக்கின்றன.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் இதுபோல் கோயிலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் அந்தப் பகுதியில் பள்ளம் தோண்டும்போது நூற்றுக் கணக்கில் இதுபோன்ற கோயில் பொக்கிஷங்கள் வெளியில் வந்துள்ளன என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தில் இவ்வளவு கோயில் தூண்கள் மற்றும் சிலைகள் இருப்பதால் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்திருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் இங்கே மண்டபங்கள் இருந்ததாகவும் கூறுகின்றனர். இந்தச் சிலைகள் எந்தக் கோயிலுக்கு சொந்தமானவை, அங்கு ஏதேனும் கோயில்கள் இருந்தனவா? இப்போது அந்த கோயிலின் நிலை என்ன என்பது தொடர்பாக தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அ.டில்லிபாபு

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அ.டில்லிபாபு என்பவர் கூறியதாவது: இந்தப் பகுதியில் கோயில் தூண்கள் இருப்பது குறித்து கடந்த டிசம்பர் 2020ம் ஆண்டில் புகார் கோடுத்தேன். அப்போது இந்து சமய அறநிலையத் துறையினர் அவற்றை எடுத்துச் சென்றனர். தற்போது அதே இடத்தில் சுமார் 20 டன் எடை கொண்ட கல்தூண்கள், சிலைகள், மணல் கல்களால் ஆன தூண்கள், விதானங்கள் ஆகியவை உள்ளன.

இந்தப் பகுதியில் ஏதேனும் கோயில்கள், மண்டங்கள் இருந்திருக்கலாம். இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும். அவ்வாறு இருந்தால் அதனை இடித்து சேதப்படுத்தியது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்தப் பகுதியில் தொன்மையான கோயில் இடிக்கப்பட்டிருந்தால் அந்தக் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என்ன ஆனது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலியிடம் கேட்டபோது, இதுபோல் தூண்கள் இருப்பது குறித்து மாநில தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த இடத்தில் ஒரு மண்டபம் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. கோயில் இருந்ததா அல்லது மண்டபம் இருந்ததா என்பது தொடர்பாக இன்னும் தொல்லியல் துறையில் இருந்து அறிக்கை வரவில்லை.

அவர்கள் அறிக்கை அளித்த பிறகே அந்த பகுதியில் உள்ள தூண்களை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமா? அல்லது இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமா? அல்லது அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

x