திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு காரணமாக சம்பா பயிர்களின் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் உரத்தட்டுப்பாடு ஏதுமில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இது விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டில் 9.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இவை 40 முதல் 80 நாட்கள் வயதுடைய பயிர்களாக உள்ளன.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி பயிர்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்துள்ள நிலையில், நெற்பயிர்களுக்கு தேவையான யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மகசூல் குறையும்: இதுகுறித்து விக்கிரபாண்டியம் விவசாயி ஜீவா கூறியதாவது: தற்போது சம்பா பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில், யூரியா தெளித்தால் தான் பயிர்கள் நன்கு வளர்ந்து, பால் பிடித்து கதிர்கள் வெளியில் வரும். இல்லாவிட்டால், நெற்கதிர்கள் வெளி வந்தாலும், பதராகி மகசூல் குறைந்துவிடும்.
ஆனால், தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் கடைகளிலும் யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்’’ என்றார்.
தட்டுப்பாடே இல்லை: இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, அவர்கள் கூறியது: மொத்த உர ஒதுக்கீட்டில் 30 சதவீதம் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. நிகழாண்டில் பெரும்பாலும் குறுவை மற்றும் தாளடி சாகுபடி இல்லாத நிலையில், அதிகளவிலான விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஒரே நேரத்தில் யூரியா, டிஏபி உரம் கேட்பதால் அவ்வப்போது சிறு சிறு தடங்கல்கள் ஏற்படுகின்றன. இருந்தாலும், அவர்களுக்கு தேவையான உரங்களை விநியோகித்து வருகிறோம். இதை சிலர் தவறாக கருதி, உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
நிகழாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 35,508 விவசாயிகளுக்கு ரூ.256 கோடியே 90 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய உரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கையிருப்பில் இருந்த டிஏபி உரத்தை வைத்து விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். மேலும் 600 டன் உரம் சில கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது. யூரியா உரத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,800 டன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தற்போது 900 டன் அளவுக்கு யூரியா வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, எங்கும் உரத்தட்டுப்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் உர விற்பனையில் தடைகள் இருந்தால், அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், போதிய அளவு உரங்கள் இருப்பில் உள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுவதால், இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த உரங்கள் எல்லாம் எங்க இருக்கு?- அரசு விளக்கமளிக்க வலியுறுத்தல் பாமக தலைவர் அன்புமணி நேற்று எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கு தற்போது யூரியாவும், பொட்டாஷும் பெருமளவில் தேவை. ஆனால், தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட அந்த உரங்கள் கிடைக்கவில்லை. சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, 25 சதவீதம் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டிஏபி, 22,866 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. இதுகுறித்து அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.