விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை காலம் தொடங்கி விட்டாலே மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான் என்று கூறும் அளவுக்கு வசூல் வேட்டை இருக்கிறது.
ஒரு கிராமத்தில் மின்மாற்றி ஒன்று பழுதானால், அந்த மின்மாற்றியில் இருந்து செல்லும் மின் கம்பியில் இணைக்கப்பட்டுள்ள விவசாய மின் இணைப்புகள் ஒவ்வொன்றுக்கும், ஆயிரக்கணக்கில் பங்கு போட்டு, அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து லாரி வைத்து மின் மாற்றியை தங்கள் கிராமத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதனை பொருத்த வரும் மின்வாரிய ஊழியர்கள், மேற்பார்வையிடும் அதிகாரிகள் அனைவருக்கும் ஆயிரக்கணக்கில் கப்பம் கட்ட வேண்டும். இதெல்லாம் செய்தால்தான் உடனே மின் விநியோகம் நடைபெறும். இல்லாவிட்டால் மின்வாரிய ஊழியர்கள் ஏதேதோ காரணங்கள் கூறி நாட்களை கடத்துவது வாடிக்கையாக உள்ளது.
கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் வேறுவழியின்றி சாகுபடி செலவோடு இச்செலவையும் சேர்த்து செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். மின்சாரம் அத்தியாவசியம் என்பதால், கேட்டத் தொகையை வேறுவழியின்றி பொதுமக்களும் கொடுத்து விடுகின்றனர்.
புதிய மின் இணைப்பு, மீட்டர் பாக்ஸ் பொருத்தல், மீட்டர் பாக்ஸ் மாற்றம், மும்முனை மின்சாரத்துக்கு மாற்றம், மீட்டர் பாக்ஸில் வயர் மாற்றம் என அனைத்து பணிகளுக்கும் குறைந்த கட்டணத்தை அரசு விதித்துள்ளது. வாரியத்துக்கு குறைவான பணத்தை செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை தங்களுக்குள் மின்வாரிய ஊழியர்கள் பங்கு போட்டுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியது: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். இந்த வசூல் வேட்டையில் கீழ் நிலை அதிகாரிகளில் இருந்து உயர் மட்ட அதிகாரிகள் வரை பங்குத்தொகை செல்கிறது. ஒரு முனை புதிய மின் இணைப்பு பெறுவதற்கு அரசு ரூ. 1,600 கட்டணம் விதித்துள்ளது.
ஆனால் மின்துறை ஊழியர்கள் ரூ. 3 ஆயிரம் முதல், 5 ஆயிரம் வரை பெறுகின்றனர். மும்முனை மின்சாரம் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 7 ஆயிரத்து 450 என அரசு கட்டணம் விதித்துள்ளது. ஆனால், நடைமுறையில் இதற்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர். நடப்பில் ஏற்படும் பழுதை சரிசெய்ய மின்துறை அலுவலகத்துக்கு நாள்தோறும் மக்கள் ஏராளமான புகார்களை அளித்து வருகின்றனர். புகாரைத் தொடர்ந்து வீடுகளுக்குச் செல்லும் மின் வாரிய ஊழியர்கள், பழுதை சரி செய்வற்கு முன்பே இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு பழுதை சரி செய்கின்றனர்.
பணத்தை குறைத்து கொடுக்கும் வீடுகளில் இருந்து அடுத்த படியாக புகார் செய்தால், அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் இழுத்தடிக்கின்றனர்.
இந்த வசூல் வேட்டையைத் தடுக்க எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு கட்டணம் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில் மின்துறை அலுவலகம், மின்கட்டணம் செலுத்தும் மையங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும். அதை ஆன் லைனிலும் பதிவேற்ற வேண்டும். இப்பணியை இத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கினறனர்.