பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் திறக்கப்படாத படிப்பகமும், பேருந்து நிலையமும்!


பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரணம்பேட்டையில் கட்டப்பட்டு பயன்படாத நிலையில் இருக்கும் பேருந்து நிலையம்.

பல்லடம்: திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2004-2005-ம் ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் படிப்பகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கட்டிடத்தை, அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த செ.ம.வேலுச்சாமி திறந்துவைத்தார். இந்நிலையில், உரிய நேரங்களில் படிப்பகத்தை திறப்பதில்லை என்றும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் பொதுமக்கள் வந்து பயன்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: ஊர்தோறும் நூலகங்களை ஆளும் திமுக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் செயல்பாட்டிலுள்ள படிப்பகங்கள் பெரும்பாலும் மூடியே இருப்பதால், அதன் நோக்கம் சிதைகிறது. அன்றாடம் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளவும், வாசிப்பை ஊக்கப்படுத்தவும் அரசு சார்பில் படிப்பகங்கள் திறக்கப்படுகின்றன.

ஆனால், திருப்பூர் - கோவை மாவட்ட எல்லைப் பகுதியான, திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள படிப்பகம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக உரிய நேரத்துக்கு திறப்பதில்லை. இதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்செல்லும் நேரத்தில், பொதுமக்கள் யாரும் படிப்பகத்துக்கு செல்வதில்லை. காரணம்பேட்டை நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள அரசு கட்டிடத்தில்படிப்பகத்தை கொண்டு சென்றால் அனைவருக்கும் பயன் தரும். ஆனால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கட்டிடத்தால், பொதுமக்கள் பயன்பாடுவெகுவாக குறைந்து வருகிறது.

பகல் நேரத்திலேயே பூட்டிக் கிடக்கும் படிப்பகம்.

இதேபோல், கோடங்கிபாளையம் ஊராட்சிக் குட்பட்ட காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பில் காரணம்பேட்டை பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் வணிக வளாகம், தண்ணீர் தொட்டி, குடிநீர் வசதி, மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் ஓய்வறை என அனைத்தும் ஊராட்சி நிதியில் ரூ.42 லட்சத்தில் கட்டப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி காணொலி காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்துவைத்தார். ஆனால், 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை. தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள், புதிதாக வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கவும், தொலைதூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்கவும், இரவு நேரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கவும்தான் இந்த பேருந்து நிலையம் பயன்படுகிறது.

மாலை நேரங்களில், மது அருந்துவோர் சுற்றித்திரிவதையும் காண முடிகிறது. ஊராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையான பயனை தரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் கா.வீ.பழனிச்சாமி கூறும்போது, “காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை படிப்பகம் திறக்கப்படுகிறது. அதற்காக ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். சில நேரம் விடுப்பில் இருந்திருக்கலாம். பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வருவதில்லை. போக்குவரத்து துறை பல முறை கடிதங்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. பயன்படுத்தப்படாத பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாக மாற்றித்தர விவசாயிகளும், ஜவுளி சந்தையாக மாற்றித்தர ஜவுளி உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இடம் ஊராட்சிக்கு சொந்தமானது என்பதால், இதுதொடர்பாக அரசுதான் முடிவெடுக்க முடியும்” என்றார்.

x