வார விடுமுறை இல்லை, தொடர்ச்சியாக பல மணி நேர பணி... - ஜிப்மரில் பயிற்சி மருத்துவர்கள் தவிப்பு!


வார விடுமுறை இல்லை; தொடர்ச்சியாக பல மணி நேரம் பணி தரப்படுகிறது. இதனால் தங்களது தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுகிறது என்று ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் குமுறுகின்றனர். கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் சேர்ந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடந்து வந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடித்து வைத்தது.

இந்தச் சூழலில் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு, அவர்கள் மீது திணிக்கப்படும் கடும் பணிச்சுமை, அவர்களுக்கு தரப்படும் வரையறுக்கப்படாத பணி நேரம் போன்றவைகள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் சிறந்து விளங்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்டோர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் ஜிப்மர் பயிற்சி மருத்துவர்களும் முன்வரிசையில் நின்று போராடினர். தங்களுக்கும் பல பிரச்சினைகள் இருப்பதாக பயிற்சி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வார விடுமுறை இல்லை தொடர்ச்சியாக பல மணி நேர பணி ஜிப்மரில் தவிக்கும் பயிற்சி மருத்துவர்கள்முதுகலை மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களே ஜிப்மரில் பயிற்சி மருத்துவர்களாக சேருகின்றனர். அவர்கள் பணிக்காலத்தில் படும்துயரங்கள் வெளி உலகுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.

இதுதொடர்பாக ஜிப்மரில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் கூறியதாவது: பயிற்சி காலத்தில், மருத்துவமனை உடனான ஒப்பந்த உடன்படிக்கையில், வேலை நேரம், பணிகள், பொறுப்புகள், வார மற்றும் ஆண்டு விடுமுறைகள் பற்றிய வரைவுகள் தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 36 மணி நேரம் வரை வேலை செய்யும் நிலை நீடிக்கிறது.

நீண்ட நேரம் உணவு, உறக்கமின்றி வேலை செய்ய வேண்டிய நிலை இங்குள்ளது. அதீத பணிச்சுமையால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இதனால் கல்வி மற்றும் அதைச்சார்ந்த ஆய்வறிக்கைகளில் கவனம் செலுத்த முடியாமல் தேர்வுகளில் சிலர் தோல்வியுறும் நிலை உருவாகிறது. போதிய ஓய்வு நேரம் இல்லாத சூழலால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட இயலாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகிய பலரும் உள்ளனர்.

அதீத பணிச்சுமை, அதைச் சார்ந்த மன அழுத்தத்தால் சிலர் மருத்துவ பணியை கைவிடுவதும், வேறு சில முடிவுகளை எடுப்பதும் நடக்கிறது. பயிற்சி மருத்துவர்களுக்கான வேலைகளைத் தவிர்த்து, ட்ராலி தள்ளுதல் போன்ற மருத்துவர்கள் அல்லாதவர் செய்யும் வேலைகளையும் சேர்த்து செய்யும் நிலையும் இங்கு ஏற்படுகிறது. இத்துடன் தரக்குறைவாக பல நேரங்களில் நடத்தப்படுவதையும் பொறுத்துக்கொண்டு பணியாற்றுகிறோம். பயிற்சி மருத்துவர்களின் நலன் கருதி ஜிப்மர் நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்து, அதை அறிவிப்பது அவசியம்.

நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்துக்கு மிகாமல் பணி வழங்கியும், கட்டாய வார விடுமுறை அளித்தும் எங்களை பணியாற்றச் செய்ய வேண்டும். எங்களுக்கு தரப்பட்ட ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறையை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ‘தொடர்ச்சியாக பயிற்சி மருத்துவர்களை 36 மணி நேரம் வரை பணிபுரிய வைப்பது மனிதத்தன்மையற்ற செயல்’ என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம், கண்டித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் வாரத்துக்கு 74 மணி நேரத்துக்கு மிகமால் பணிகள் வழங்க அறிவுறுத்தியுள்ளது. வாரம் ஒரு முறை எங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மேற்கண்டவைகளை ஏற்று, அறிவிப்பது அவசியம் என்பதே எங்கள் கோரிக்கை என்று தெரிவிக்கின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி, பயிற்சி மருத்துவர்களை காக்குமா ஜிப்மர் நிர்வாகம்?

x