திருப்பூர்: அடிப்படை வசதிகளுக்காக போராடும் சூழலை ஏற்படுத்தாமல் பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. வீடு வீடாக குப்பை சேகரித்தல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், கட்டிடங்கள், சிறுபாலங்கள் கட்டுதல், கால்வாய்கள் கட்டுதல், தார் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளும், கட்டிட அனுமதி எண் வழங்குதல், வரிவிதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல், குடிநீர் விநியோகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும், சேவைகளை பெறுவதற்கும் ஏராளமானோர் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கும், மண்டல அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். இச்சூழலில், சமீப காலமாக, மாநகரில் திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் நிறைவேற்றும் பணிகள் விரைவாக நடைபெறுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘1-வது வார்டு பிரதான சாலையில், பழைய ரேஷன் கடை முதல் அங்குள்ள பேக்கரி வரை கடந்த 3 ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குழிகளாக காணப்படுவதால், மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதைக் கண்டித்து இப்பகுதியில் நாற்று நடும் போராட்டம் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான பதாகைகள் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
57-வது வார்டு வீரபாண்டி பகுதியில் தொடர் மழையால் அப்பகுதியே குளம் போல் மாறியும் அதை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி, வருவாய் துறையை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய பிறகே, மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டன.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முதல் தாராபுரம் சாலை உஷா திரையரங்கு வரை சாலை சேதமடைந்து இருப்பதை கண்டித்து 8-ம் தேதி (இன்று) நாற்று நடும் போராட்டம் விவசாயிகள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், நேற்று முன்தினம் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன,’’ என்றனர்.
நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் கூறும்போது, “மாநகரில் சேதமடைந்த சாலைகள், அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பை, குழாய்கள் உடைப்பால் சாலைகளில் வழிந்தோடும் தண்ணீர் போன்றவற்றால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதற்கான சீரமைப்புப் பணிகள் தாமதமாக நடக்கின்றன. மக்கள் போராடும் சூழலுக்கு செல்லும் முன்னர் அடிப்படை வசதிகள், சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் (பொ) சுல்தானா கூறும்போது, “பழைய பேருந்து நிலையம் - உஷா திரையரங்கம் சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலையில், குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை தொடங்கி உள்ளது.
வீரபாண்டியில் மழைநீர் தேங்கியிருந்த பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குப்பை தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் போராட்டங்கள் அறிவித்தால், அதற்காக பணிகள் உடனடியாக தொடங்கப்படுவதில்லை. உரிய நடைமுறைகளை பின்பற்றியே பணிகள் தொடங்கப்படுகின்றன. பணி ஆர்டர் உள்ளிட்டவற்றுக்கு உரிய காலம் தேவைப்படும்’’ என்றார்.