தஞ்சாவூர்: பயிர்க் காப்பீடு செய்தாலும் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காத காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் காப்பீடு செய்ய விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடியின்போது பேரிடர்கள், மழை, வெள்ளம், வறட்சி போன்றவை ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் விவசாயிகளும் பிரீமியம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 15-ம் தேதிக்குள் நிகழாண்டு ரபி (சம்பா, தாளடி) பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செலுத்த கடைசி நாள் என காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிகழாண்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.40 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 2.20 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நடவு செய்த விவசாயிகள், பயிர்க் காப்பீடு பிரீமியத்தை ஏக்கருக்கு ரூ.548 என பொது சேவை மையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செலுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நவ.4-ம் தேதி வரை 5,383 விவசாயிகள் 16,050 ஏக்கருக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாக பூதலூரில் 976 விவசாயிகள் 2,762 ஏக்கருக்கும், குறைந்தபட்சமாக சேதுபாவா சத்திரத்தில் 3 விவசாயிகள் 19 ஏக்கருக்கும் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.
தயக்கம் காட்டுவது ஏன்? - பயிர்க் காப்பீடு பிரீமியத்தை ஆண்டுதோறும் விவசாயிகள் செலுத்தி வந்தாலும், அதற்கான இழப்பீட்டுத் தொகை என்பது ஆண்டுதோறும் குறைந்து வருவதால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் பிரீமியம் செலுத்த விவசாயி
கள் தயக்கம் காட்டுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செலுத்திய விவசாயிகளில் 4 கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.36 லட்சமும், 2022-2023-ம் ஆண்டில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.1.13 கோடியும், 2023-2024-ம் ஆண்டில் 254 கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.44.96 கோடியும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தும் தொகை கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும் போது, இழப்பீட்டுத் தொகை குறைவாகவே வழங்குவதால், காப்பீடு செய்ய ஆர்வம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ராயமுண்டான்பட்டி விவசாயி வெ.ஜீவக்குமார் கூறியதாவது: விவசாயிகளை பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த வைக்க ஆர்வம் காட்டும் வேளாண்மைத் துறையினர், பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு பெற்றுத் தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பயிர்க் காப்பீடு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் யாரை அணுகுவது என விவசாயிகள் தெரியாமல் உள்ளனர். எனவே, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பயிர்க் காப்பீடு நிறுவனத்தின் சார்பில் அலுவலகம் திறக்க வேண்டும்.
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் நிலங்களை சோதனை அறுவடை செய்யும்போது, விவசாயிகளையும் அருகில் வைத்துக் கொண்டு அறுவடை செய்ய வேண்டும். அதேபோல, வருவாய் கிராம அளவில் பாதிப்பு ஏற்பட்டால் தான், இழப்பீடு என்பதை மாற்றி, தனி நபர் வயலில் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் வகையில் சேத மதிப்பு கணக்கீடு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தால் தனியார் நிறுவனங்கள்தான் பயன் பெறுகின்றன. எனவே, தமிழக அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்றார்.