நெய்வேலி: 35 ஆண்டுகளுக்கு முன்னர், நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பணியில் சேர்ந்து,படிப்படியாக நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் அந்நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். இன்று அந்தச் சூழல் மாறி நிரந்தரப் பணிகள் அபூர்வமாகி வருகின்றன.
மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து அனல் மின் உற்பத்தி செய்து வருகிறது. அத்துடன் மரபுசாரா எரிசக்தியை வளர்க்கும் வகையில் சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து நெய்வேலியில் மட்டும் இயங்கிவந்த என்எல்சி இந்தியா நிறுவனம் தற்போது, தூத்துக்குடியில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையம், திருநெல்வேலியில் காற்றாலை மின்சாரம், ராஜஸ்தான் மாநிலத்தில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்துடன் கூடிய அனல் மின்சாரம், ஒடிசாவில் நிலக்கரிச் சுரங்கம், உத்தரப்பிரதேசத்தில் நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையம் என பரந்து விரிந்து நவரத்னா அந்தஸ்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இது தவிர ஜார்கண்ட், அஸ்ஸாம், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் தனது மின்னுற்பத்தி மற்றும் நிலக்கரி சுரங்கங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதோடு, அங்கு அணுமின் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த அளவுக்கு சிறப்பான முறையில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் நேரடி மனிதவளத் திறன் என்பது சற்றேறக்குறைய 11 ஆயிரமாகவும், மறைமுக மனிதவளத் திறன் (ஒப்பந்த அடிப்படையில்) 16 ஆயிரமாகவும் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள், இரு அனல்மின் நிலையங்கள், அலுவலகங்கள், சேவைப் பிரிவுகள் என நெய்வேலியில் மட்டும் இயங்கிவந்த இந்நிறுவனத்தின் நேரடி மனித வளத்திறன் என்பது 25 ஆயிரமாகவும், மறைமுக மனிதவளத் திறன் 8 ஆயிரத்துக்கும் குறைவாகவும் இருந்து வந்தது. தற்போது நிறுவனம் விரிவடைந்த நிலையில், நேரடி மனிதவளத் திறன் குறைந்து, மறைமுக மனிதவளத் திறன் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
மனிதவளத் திறனுக்கு பாதுகாப்பு அரணாக தொழிற்சங்கங்கள் விளங்கி வருகின்றன.25 ஆண்டுகளுக்கு முன்புவரை 15 தொழிற்சங்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 6 என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நேரடி தொழிலாளர்கள் நியமனம் என்பது 7 ஆயிரமாக குறைந்திருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மறைமுக தொழிலாளர்களாக கருதப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இல்லை; அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் பிரதான அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்ற குறைபாடும் உள்ளது.
தொழில் நகரமான நெய்வேலி படிப்படியாக தனது பொலிவை இழந்து வருகிறது. தொழிலாளர்களின் குடியிருப்புகள் காலியாகி, மறு தொழிலாளர்கள் நியமனம் இல்லாததால் குடியிருப்புகள் மூடப்பட்டு, பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப நவீன தொழில்நுட்பமும், உலகமயமாக்கல் கொள்கை யும், மனிதவளத் திறனுக்கு சவாலாக மாறியதால், மனிதவளத்தைக் காட்டிலும், லாப நோக்கில் இயங்க வேண்டிய கட்டாயத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் தள்ளப்பட்டது என்றும், அதனால் ‘அவுட்சோர்ஸிங்’ முறை தவிர்க்க இயலாதது என்றும், குறிப்பிட்ட காலத்திற்கான பணி செயல்முறை (FTE) முறையும் அவசியமாகிறது என்றும் ஓய்வுபெற்ற இயக்குநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலகமயமாக்கல் விளைவாக மனிதவளத் திறனுக்கான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்வதில் இருந்து நிறுவனங்களின் நேரடி பங்களிப்பு தவிர்க்கப்பட்டு, அவை ஒப்பந்ததாரரின் பொறுப்பு என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஒப்பந்ததாரர் முதலாளித்துவ முறையில் தான் செயல்படுவார் என்கிற போது, தொழிலாளிக்கான பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.
இந்த நிலையை தடுத்து நிறுத்த வேண்டிய தொழிற்சங்கங்களும் தனது கடமையில் இருந்து தவறியதன் விளைவு இன்று இது பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது. ஒவ்வொரு மாதமும் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 100 முதல் 400 பேர் வரை ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
அந்த இடங்கள் காலிப் பணியிடமாக கருதப்படாமல், தொடர் வெற்றிடமாக இருப்பதால், இருக்கின்ற பணியாளர்கள் மீது கூடுதல் சுமை ஏற்றப்படுகிறது. இதனால் பணியாற்றி வருபவர்களும் எப்போது ஓய்வுகிடைக்கும் என்ற மனநிலைக்கு மாறி வருகின் றனர். மாதம் சற்றேறக்குறைய ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் ‘அப்ரண்டீஸ்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு பயிற்சிக் கொடுப்பதாக கூறி, பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
“நெய்வேலிக்குச் சென்றால் ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடும், அதை வைத்து வாழ்க்கையை நகர்த்த வழி கிடைத்து விடும் என்ற பழைய நம்பிக்கை பொய்த்து, அங்கு சென்றால் நிலையில்லா வாழ்க்கைத் தான் கிடைக்கும் என்ற அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் சிஐடியு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் திருஅரசு.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அதிமுக தொழிற்சங்க நிர்வாகி வெற்றிவேல் பேசுகையில், “தொழிலாளர்கள் வசிக்கும் வீதிகளில் காலியாக உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது. வாரிசுக்கு வேலை, சொசைட்டி தொழிலாளர்கள் பணி நிரந்தரத்தில் உள்ள குறைபாடு களைதல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர் அதொஊச பேரவைச் செயலாளர் தலைமையில், நிர்வாகத் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அந்த மனுக்கள் மீது நிர்வாகம் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தொழிலாளர்களை தயார்படுத்துவோம்” என்று தெரிவிக்கிறார். இதுதொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனதகவல் தொடர்பு பொதுமேலாளர் கல்பனாதேவியிடம் கேட்டபோது, “நேரடி பணி நியமனங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
மேலும் தேவைக்கேற்ப எஃப்டிஇ முறையிலும் பணி நியமனங்கள் நடைபெறுகிறது. ஆனால் எஃப்டிஇ முறையில் பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை” என்று தெரிவிக்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன், கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணுபிரசாத் எம்.பி என்எல்சியில் வடமாநிலத்தவருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.