கோவை: கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகளும் உள்ளன. 9 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மூலம் தினமும் சராசரியாக 1,100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இச்சூழலில், சாலையோரங்களில் திறந்தவெளி இடங்களில் குப்பை கொட்டுவது தொடர் கதையாக உள்ளது.
இதுகுறித்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறியதாவது: மாநகர சாலைகளில் முன்பு அரை டன், ஒரு டன், இரண்டு டன் கொள்ளளவுகளில் குப்பைத் தொட்டிகள் இருந்தன. இதில், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை பொதுமக்கள் கொட்டிவந்தனர். இச்சூழலில், தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்துகிறோம் எனக்கூறி சாலையோர குப்பைத் தொட்டிகளைமாநகராட்சியினர் அகற்றினர்.
அதற்கு பதிலாக, தூய்மைப் பணியாளர்கள் உரிய நேரத்துக்கு வீடுவீடாக சென்று, மக்கள் தரம் பிரித்து வைத்துள்ள குப்பையை வாங்கிச் செல்கின்றனரா என்றால், அதுவும் இல்லை. காலை 7 மணிக்கு பணியை தொடங்கும் தூய்மைப் பணியாளர்கள், முக்கிய வீதிகளுக்குசெல்ல 9 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. அதற்குள் அங்கிருக்கும் மக்கள் வீட்டைப் பூட்டிவிட்டு, வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
சில இடங்களில் முறையாக மக்கள் தரம் பிரித்து குப்பையை கொண்டு வந்தாலும், அதை உடனடியாக வாங்கி தூய்மைப் பணியாளர்கள் கொட்டிச் செல்லாமல், ஒவ்வொரு குப்பையாக மற்றவர்கள் முன்னிலையில் பிரித்து மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றனர். தரம் பிரித்த குப்பையை ஓரிரு நாள் வீட்டில் வைக்கலாம்.தொடர்ந்து வைத்திருந்தால் துர்நாற்றம் வீசும். தூய்மைப்பணியாளர்களும் சரிவர வருவதில்லை.
சாலையில் குப்பைத்தொட்டியும் இல்லை. இதனால், வேறுவழியின்றி குப்பையை சாலையோரங்களில் மக்கள் கொட்டிச் செல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் கடந்த சில வாரங்களாக மாநகரில் எந்த வீதியை பார்த்தாலும், மூட்டை மூட்டையாக, குவியல் குவியலாக குப்பை கொட்டப்பட்டு கிடக்கிறது. அதில் துர்நாற்றம் வீசி, நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்பூச்சிகள், புழுக்கள் உருவாகி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
குப்பை சேகரிப்பில் சரியானமேலாண்மையை மாநகராட்சி பின்பற்ற வேண்டும். இல்லையெனில் மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் ஆபத்தாகி விடும். மாநகரில் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் வைக்க வேண்டும்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு தொட்டிகளை வைக்கலாம். அதில் கொட்டப்படும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அதேபோல், வீடுவீடாக தூய்மைப் பணியாளர்கள் உரிய நேரத்துக்கு வந்து குப்பை சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதை முழுமையாக முறைப்படுத்திவிட்டு, குப்பைத் தொட்டிகளை அகற்றியிருந்தால் இந்தளவுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு இருக்காது, என்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ‘‘தீபாவளி சமயத்தில் சாலையோர திறந்தவெளி இடங்களில் குப்பை அதிகளவில் தேங்கியது. அடுத்த நாளே இரவு, பகலாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றப்பட்டது’’ என்றார்.
மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்படி, வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு குப்பை கொண்டு செல்வதை குறைக்கவும், வார்டுகளிலேயே தரம் பிரித்துஅழிக்கவும், தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பையை தரம் பிரித்துசேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். சாலையோரங்களில் மக்கள் குப்பை கொட்டுவதை தடுக்க, தூய்மைப் பணியாளர்கள் விரைவாக களத்துக்குச் சென்று குப்பையை சேகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.