நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை: ஆட்கொல்லி சாலையாக மாறிய ‘எல் அண்டு டி’ புறவழிச்சாலை


கோவை சிந்தாமணி புதூர் சந்திப்பு அருகே இரு வழிச்சாலையாக குறுகிக் காணப்படும் ‘எல் அண்டு டி’ புறவழிச்சாலை. | படங்கள்: ஜெ.மனோகரன் |

கோவை: சேலம் - கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2001-ல் ஏற்படுத்தப்பட்டது. பெங்களூரு, சென்னை, சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், கோவை வழியாக கேரளாவுக்கு செல்வதற்கும், கேரளாவில் இருப்பவர்கள் கோவை வழியாக பெங்களூரு, சென்னை, சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு செல்வதற்கும் பிரதான சாலையாக சேலம் - கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இச்சாலையின் மூலம் நகரின் உட்புறப் பகுதிக்கு செல்லாமல், புறவழியாகவே விரைவாக செல்லலாம். இச்சாலை தொடக்கத்தில் இருந்து கோவை மாவட்டத்தின் நீலாம்பூர் வரை ஆறுவழிச்சாலையாக வருகிறது. பின்னர், நீலாம்பூரிலிருந்து - மதுக்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவழிச்சாலையாக சுருங்கிச் செல்கிறது. இந்த 26 கிலோ மீட்டர் தூரமும் எல் அண்டு டி புறவழிச்சாலை எனப்படுகிறது. எல் அண்டு டி நிறுவனம் இச்சாலையை பராமரிக்கிறது.

அதிகரிக்கும் விபத்துகள்: கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறும்போது, ‘‘தினமும் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் அளவுக்கு இந்த சாலை அகலமானதாக இல்லை. இச்சாலையின் ராவத்தூர் பிரிவு, வெங்கிட்டாபுரம் பிரிவு, ஈச்சனாரி பிரிவு, போடிபாளையம், நாச்சிபாளையம் பிரிவு, சிந்தாமணி புதூர் பிரிவு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

காவல்துறையினரின் புள்ளிவிவரப்படி, இச்சாலையில் கடந்த 2022-ம் ஆண்டு 55 பேரும், 2023-ம் ஆண்டு 120 பேரும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள் ளன. விபத்துகளை தடுக்க, இந்த 26 கிலோ மீட்டர் தூரத்தை 4 வழித்தடமாகவோ, 6 வழித்தடமாகவோ அகலப்படுத்துவது தான் தீர்வு’’ என்றார்.

மதுக்கரையைச் சேர்ந்த ரவி சுந்தரம் கூறும்போது, ‘‘ஒவ்வொரு முறையும் ‘நித்திய கண்டம் பூர்ண ஆயுசு’ என்பதன் அடிப்படையிலேயே உயிரை கையில் பிடித்துக் கொண்டு இச்சாலையில் செல்கிறோம். 60 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு சுங்கச்சாவடிதான் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரே சட்டத்தை பலமுறை சொல்லி இருக்கிறார்.

ஆனால், இந்த 26 கிலோ மீட்டர் தூரத்தில் நீலாம்பூர், சிந்தாமணி புதூர், ஈச்சனாரி, மதுக்கரை ஆகிய இடங்களில் 6 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சந்தேகத்துக்கே இடமில்லாமல் பகல் கொள்ளை நடந்து வருகிறது. அதிலும் வெறும் இரண்டு வழிச் சாலையாக - குறுகலாக உள்ள இந்த சாலைக்கு இத்தனை சுங்கச் சாவடி அமைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிலேயே இந்த ஒரு இடமாகத்தான் இருக்க முடியும். சுங்கச்சாவடி வசூல் நடக்கும் சாலைகளில் பொதுவாக காணப்படும் வசதிகள் எதுவுமே இங்கு கிடையாது. எந்தவிதமான எச்சரிக்கை பலகைகளும் கிடையாது.

நீலாம்பூரில் இருந்து திருச்சி சாலைக்கு வருவதாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூ.80 கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும். இந்த சுங்கச்சாவடிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட மக்களிடம் மிக அதிகமாக எப்போதோ வசூலிக்கப்பட்டு விட்டது. இப்போது நடப்ப தெல்லாம் அநியாய வசூல்தான்!

மதுக்கரை - போடிபாளையம், மதுக்கரை - நாச்சிபாளையம் பகுதிகளில் இச்சாலையை கிராஸ் (கடந்து) செய்து செல்ல வேண்டும். ஆனால், அங்கு சிக்னல்கள் இல்லை. போலீஸாரும் இருப்பதில்லை. பொதுமக்களும், பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவியரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சாலையை இருபுறமும் ஓடிக் கடக்கும் காட்சிகளை இரக்கமுள்ள எந்த அதிகாரி பார்த்தாலும் மனம் பதைபதைத்துவிடும். ஆனால் இங்கோ விபத்தில் வரிசையாக இறந்துகொண்டிருக்கும் அப்பாவிகளைப் பற்றி யாருக்குமே கவலை இருப்பதாகத் தெரியவில்லை’’ என்றார்.

‘எல் அண்டு டி’ புறவழிச்சாலையில் சுங்கச்சாவடியை கடந்து சிந்தாமணி
புதூர் சிக்னல் சந்திப்பு அருகே காத்திருந்த வாகன ஓட்டிகள்.

கனரக வாகனங்கள் வந்தால்... மேலும் இந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ‘‘இந்த 26 கிலோ மீட்டர் சாலையில், ஒரு டாரஸ் லாரியோ, நீண்ட கன்டெய்னர் லாரியோ, சரக்கு லாரியோ சென்றால் அவ்வளவுதான். அந்த லாரி இருவழிச்சாலை முடிந்து 4 வழிச்சாலையை தொடும்போது தான், அதன் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் தாண்டிச் செல்ல முடியும்.

அதுவரை, வரிசையாக சுங்கச் சாவடிகளில் வெகுநேரம் வரிசையில் நின்று பணத்தைச் செலுத்திக் கொண்டே அந்த லாரிகள் பின்னால் 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஊர்ந்துதான் செல்ல வேண்டும். இதனால் வெறும் 26 கிலோமீட்டரைக் கடப்பதற்கு சில சமயம் ஒன்றரை மணி நேரம் ஆகிவிடுவதோடு, எரிபொருளும் வீணாகிறது. அதையும் மீறி இவ்வாகனங்களை முந்திச் செல்லும் போது, எதிர்ப்புறம் வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது,’’என்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கோவை கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இச்சாலையை பராமரிக்கும் எல் அண்டு டி ஒப்பந்த நிறுவனத்துக்கு வரும் 2031-ம் ஆண்டு வரை ஒப்பந்தக் கால அளவு உள்ளது. அதிகரிக்கும் விபத்துகள், உயிரிழப்புகள், வாகனப் போக்குவரத்து பெருக்கம் போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட 26 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத்துறை உயர் அதிகாரிகள், எல் அண்டு டி உயர் அதிகாரிகள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

இறுதியாக இங்குள்ள ஒரு கல்லூரியின் தாளாளர் நம்மிடம் பேசும்போது, ‘‘பாராமுகமாக இருப்பது மத்திய அரசா, எல் அண்டு டி நிறுவனமா என்பதை உடனே நீதிமன்றம்தான் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அதற்கும் முன்பாக, கோவைக்கு தொடர்ந்து பல நல்ல திட்டங்களைக் கொண்டு வரும் தமிழக முதல்வராவது இதில் தலையிட்டு உடனடி தீர்வைத் தேடித் தர வேண்டும். அதை மட்டும் செய்துவிட்டால் இந்த ஆட்கொல்லி சாலையை அன்றாடம் பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் நன்றி யோடு அவரை நினைப்பார்கள்!” என்றார் உருக்கமாக!

x