திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முடக்கம்


பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.90 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முடங்கியுள்ளதால் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் இருந்து நாள்தோறும் 10 டன்னுக்கும் அதிகமான குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், மாநகராட்சி சார்பில் 12 இடங்களில் உரப் பூங்கா அமைத்து, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு போன்றவை மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீணாகும் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டனர். அதன்படி வீடுகள், காய்கறி சந்தைகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் காய்கறி கழிவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

400 கிலோ வாட் மின்சாரம்: திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலையின் பின்புறம் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 5 மெட்ரிக் டன் காய்கறி கழிவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்றன. கடந்த 2017-ல் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை காணொலி காட்சி மூலம் அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பிறகு, சில மாதங்களாக தனியார் நிறுவன உதவியுடன் காய்கறி கழிவை அரவை இயந்திரங்கள் மூலம் அரைத்து, அதனை நொதிக்க செய்து அதிலிருந்து வாயு (பயோ காஸ்) மூலம் 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்றன. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மலைக்கோட்டை அருகேயுள்ள நீரேற்று நிலையம், மாநகராட்சி வார்டுகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

முடங்கிப்போன திட்டம்: இதற்கிடையே, சில காரணங்களால் தனியார் நிறுவனம் பின் வாங்கியதால் மாநகராட்சியில் இருந்து பெயரளவுக்கு மட்டுமே காய்கறி கழிவில் இருந்து வாயு உற்பத்தி செய்து வந்தனர். அதன் பிறகு, இத்திட்டம் செயல்படாமல் முழுமையாக முடங்கியது. தற்போது காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இங்குள்ள அரவை இயந்திரங்கள், காய்கறி கழிவை நொதிக்கச் செய்யும் பிரத்யேக கருவி, ஜெனரேட்டர்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

தற்போதைய மாநில அரசும், மாநகராட்சியும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்குகளுக்கு வழங்கி இருந்தால் மாநகராட்சிக்கான மின் கட்டணம் ஓரளவு குறைந்திருக்கும். ஆகவே இத்திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி கூறியதாவது: காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இது முற்றிலும் தோல்வி அடைந்த திட்டம். ரூ.1 கோடி வரை நிதியை வீணடித்துள்ளனர். இத்திட்டம் கொண்டு வரப்பட்ட நகராட்சி, மாநகராட்சியில் தற்போது வரை காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி செயல்படாமல் முடங்கியுள்ளன.

இத்திட்டத்தை மீண்டும் கொண்டு வர அதிகம் செலவாகும். தற்போது மாநகராட்சியில் போதிய நிதி இல்லை. எனவே, இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டம் இல்லை. மாறாக, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். அதன் மூலம், மக்கும் குப்பை அப்புறப்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

x