உத்தமபாளையம்: தொடர் மழையால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடை இயந்திரங்கள் வயலுக்குள் இறங்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முல்லை பெரியாறு அணை மூலம், தேனி மாவட்டத்தில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. இந்நிலையில், முதல் போக சாகுபடிக்காக கடந்த ஜூன் முதல் தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிலத்தை உழுது நாற்று பாவும் பணிகள் தொடங்கின.
தற்போது இப்பயிர்கள் வளர்ந்து மகசூல் பருவத்தை எட்டி உள்ளன. கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், இப்பகுதியில் சில ஆண்டுகளாகவே இயந்திரம் மூலமே அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் லாரி களில் கொண்டு வரப்பட்டுள்ளன.
தலை மதகுப் பகுதியான லோயர்கேம்ப், கூடலூர், கம்பம் மற்றும் குச்சனூர், போடேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு மும்முரமாக அறுவடை நடைபெற்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறக்க முடியாமல் ஆங்காங்கே களத்து மேடு, சாலை மற்றும் வயல் ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து சேலம் ஆத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபாலன் என்பவர் கூறுகையில், மழை பெய்வதால் வண்டியை வயலுக்குள் இறக்க முடியவில்லை. இதனால் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் எங்களால் வெளியிலும் செல்ல முடியவில்லை என்றார்.
விவசாயிகள் கூறுகையில், கூடலூர், குச்சனூர், ஆங்கூர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாகவே அறுவடை தொடங்கியதால் பாதிப்பு இல்லை. உத்தமபாளையம், சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி வயல்களில் கனமழையால் அறுவடை பணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள் ளன. சில நாட்கள் கழித்து அறுவடை செய்தாலும், ஈர நெல்லுக்கு உரிய விலை கிடைக்காது. காய வைத்தே விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.