சாக்கடை கால்வாயாகும் ‘திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி’ பேருந்து நிலையம்!


திருப்பூர்: திருப்பூர் ’ஸ்மார்ட் பேருந்து நிலையம்’, சாக்கடை கால்வாயாக அடிக்கடி மாறுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பல்வேறு வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தாலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கிலான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் என்பதால் தொடர்ச்சியாக பராமரிப்பும் தேவைப்படுகிறது. ஆனால் மக்களின் தேவைக்கேற்ப பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், பனியன் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் திருப்பூர் மாநகருக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். அதேபோல் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிகம் பேர் பயன்படுத்தும் பேருந்து நிலையமாக இது உள்ளது.

இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பேருந்து நிலையத்துக்குள் வருவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது வெளியேறும் கழிவுநீரால், கடும் துர்நாற்றத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பயணிகள், பள்ளி குழந்தைகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட கூடிய சூழல் நிலவுகிறது. கழிவுநீர் அடிக்கடி வெளியேறுவதும், அதனை அப்போது சீரமைப்பதுமாக இல்லாமல், பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கும் வகையில் நிரந்தரத் தீர்வாக கழிவுநீர் வெளியேறுவதை நிரந்தரமாக தடுக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும்,’’ என்றனர்.

கடைக்காரர்கள் சிலர் கூறும்போது, “உணவகத்தில் இருந்து கழிவுநீர் முறையாக வெளியேற வழி இல்லாததால், சாக்கடை கால்வாய் போன்று பேருந்து நிலையம் அடிக்கடி மாறுகிறது. உணவக கழிவுநீர் என்பதால் சில மணிநேரத்தில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. கடையில் பணியாற்றுபவர்களும், கடைக்கு பொருள் வாங்க வருபவர்கள் மற்றும் பயணிகளும் அவதிப்படுகின்றனர்.

அதேபோல் நகரும் படிக்கட்டுகள் பராமரிப்பு பணி நடப்பதாக மாநகராட்சி சார்பில் முன்னாள் ஆணையர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது நகரும் படிக்கட்டுகள் உள்ள நுழைவுவாயில் பகுதியில், குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதாக போலீஸார் உள்ளிட்டோர் தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது நிரந்தரமாக பூட்டு போட்டு வைத்துள்ளனர். தொடர்ச்சியாக ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, போதிய தூய்மைப் பணியாளர்களையும், அதிகாரிகளையும் நியமித்து, கண்காணிப்பு பணியை நாள்தோறும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று,’’ என்றனர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் (பொ) சுல்தானா கூறும்போது, “திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வெளியேறுவது தொடர்பாக பிரச்சினை இருக்கிறது. உணவகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பொதுமக்களின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அறை பூட்டப்பட்டுள்ளது தொடர்பாகவும், அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன்” என்றார்.

திருப்பூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, “திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த பவன்குமார்கிரியப்பனவர் மாறுதலாகி சுமார் ஒரு மாதம் ஆகும்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையராகஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும்.இல்லையென்றால் அதிமுக சார்பில் போராட்டம்நடத்தப்படும்” என்றார்.

x