புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே தொடையூரில் விரவிக் கிடைக்கும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என ஓய்வு பெற்ற பேராசிரியர் இரா.கருப்பையா தெரிவித்துள்ளார். தொடையூர் பகுதியில் கல் வட்டம், கல் பலகை, குன்றுகள், பானை ஓடுகள் என வரலாற்று சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் விரவிக் கிடக்கின்றன.
இதுகுறித்து ஆய்வு செய்த அவர் மேலும் கூறியதாவது: நார்த்தாமலை அருகே தொடையூரில் பெருங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம் வரை மக்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு வரலாற்று சின்னங்கள் கிடைத்துள்ளன. இங்கு சுமார் 2 ஏக்கரில் கல்வட்டங்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.
முதுமக்கள் தாழிகள் உள்ள இடங்களில் புதர்மண்டி உள்ளது. ஈமக்குழிகளின் மேல் மூட பயன்படுத்தும் கற்பலகைகள் ஏராளம் உள்ளன. மேலும், வட்டமாக குடியிருப்புகள் இருந்ததற்கு சான்றாக அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் சரிந்து கிடக்கின்றன. அதன் அருகே கற்குன்றுகளும் தொடர்ச்சியாக உள்ளன.
இரு குன்றுகளில் எண்ணெய் பிழிவதற்கு பயன்படுத்தும் இரு செக்குகள் உள்ளன. இங்கு எண்ணெய் வணிகம் பிரபலமாக இருந்துள்ளது. இங்குள்ள தொடக்குளம் என்ற குளத்துக்குள், தளவாய் கருப்பர் என்ற சிலையை இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். போரில் இறந்த தளவாயாக அவர் இருக்கலாம்.
மேலும், இங்குள்ள சிவன்கோயிலில் மூலவர் தொடராண்டார் என்றழைக்கப்படுகிறார். இக்கோயில் வளாகத்தில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுடன், தொடையூரைச் சுற்றிலும் வயல், வரப்பு, திடல் என எல்லா பக்கமும், ஏராளமான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவிக் கிடக்கின்றன.
பெரிய அளவிலான கோயில் காடுகளும் உள்ளன. சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான மனிதவாழ்விடம் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியை தமிழகத் தொல்லியல் துறையினர் மேலும், சேதம் அடையாமல் பாதுகாப்பதுடன், முழுமையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.