புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால், மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கண்காணிப்பில் 986 கண்மாய்களும், ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பில் 5,017 குளங்களும் உள்ளன.
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. முழுவதும் நிரம்பிய கண்மாய், குளங்களில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைநீர் நிரம்பிய கண்மாய், குளங்கள் மட்டுமின்றி பண்ணைக் குட்டை, மழைநீர் குட்டை உள்ளிட்ட இடங்களில் மீன் வளர்க்கும் நோக்கில் மீன்குஞ்சுகள் விடும் பணியில் விவசாயிகள் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அறந்தாங்கியைச் சேர்ந்த மீன் வளர்ப்பு முன்னோடி விவசாயி வி.ராமநாதன் கூறியது: அறந்தாங்கியில் கடந்த 10 ஆண்டுகளாக கண்மாய்களை மீன்பாசி குத்தகைக்கு ஏலம் எடுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். கண்மாய்களில் மீன் வளர்க்கவும், பிறருக்கு விற்பனை செய்யவும் 2 குட்டைகளில் மீன்குஞ்சுகளை வளர்த்து வருகிறேன். மீன்குஞ்சுகளின் அளவுக்கு ஏற்ப ரூ.2 முதல் ரூ.6 வரை விற்பனை செய்கிறேன். கடந்த மாதம் மட்டும் 1 லட்சம் மீன்குஞ்சுகள் விற்பனையாகின.
நீர்நிலைகளில் மேற்பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி என 3 பகுதிகளிலும் வளர்வதற்கு ஏற்ப சிசி, ரோகு, மிர்கால், கட்லா, கெண்டை போன்ற வெவ்வேறு ரக மீன்குஞ்சுகள் உள்ளன. பரந்து விரிந்த கண்மாய்களில் மீன் வளர்ப்பதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.
இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6,003 குளம், கண்மாய்களில் பெரும்பாலானவை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நிரம்புகின்றன. இவற்றில் மீன் வளர்க்க புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் பண்ணையில்தான் மீன்குஞ்சுகள் வாங்கப்படுகின்றன. இதனால், அதிக தொகை செலவாகிறது.
சிலருக்கு மீன் வளர்ப்பில் ஆர்வம் இருந்தாலும் மீன்குஞ்சுகள் உள்ளூரில் எளிதில் கிடைக்காததால் வளர்க்க முடியவில்லை. எனவே, மீன்வளத் துறை மூலம் உள்ளூர் சூழலில் வளரும் மீன்குஞ்சுகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து மீன்வளத் துறை மாவட்ட உதவி இயக்குநர் ந.பஞ்சராஜா கூறியது: தமிழக அரசு சார்பில் மாவட்டத்தில் அறந்தாங்கி, தட்டாமனைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மீன்குஞ்சு பண்ணைகளில் இருந்து உள்ளூர் குளம், கண்மாய்களில் வளரக்கூடிய மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் வெளியூர் சென்று அதிக விலை கொடுத்து மீன்குஞ்சுகளை வாங்கி வருகின்றனர். மீன்வளத் துறை சார்பிலும் குளம், கண்மாய்களில் வளர்ப்புக்காக மீன்குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன என்றார்.