தீபாவளிக்கு முந்தைய நாளில் தேவர் ஜெயந்தி விழா - சமாளிக்குமா மதுரை காவல் துறை?


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ மாசி வீதியில் கிடைக்கும் இடத்தை கடையாக மாற்றி வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மதுரையில் கொட்டும் மழையிலும் தீபாவளி விற்பனை விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பிரபல வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை வாங்குவதற்கு தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குடும்பம், குடும்பமாக மதுரைக்கு வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது.

கடைகள் உள்ளே மட்டுமல்லாமல் சாலைகளிலும் திருவிழா போல் மக்கள் கூட்டம் செல்கிறது. தற்போது வரை நடுத்தர, உயர் தட்டு மக்கள், ஆடைகள், பொருட்களை வாங்கி செல்கின்றனர். இன்னும் பெரும்பாலான சிறிய நிறுவனங்களில் தீபாவளி போனஸ், முன்தொகை வழங்கப்படவில்லை. அதனால் இதன் பிறகுதான் ஏராளமானோர் மதுரைக்கு பொருட்கள் வாங்க வருவார்கள்.

குறிப்பாக கடைசி நாளில் மதுரை விளக்குத்தூண், மாசி வீதிகளில் மட்டுமில்லாது மாநகர சாலைகளே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெரும் நிறுவனங்கள் முதல் சிறுகடைகள், நடைபாதை கடைகளில் தீபாவளி வியாபாரம் களைகட்டும்.

நடைபாதை கடைகளில் சாலையோர வியாபாரிகள் தீபாவளிக்கு முந்தைய நாளில் ஆடைகள், பொருட்களை மிக குறைவான விலைக்கு விற்பார்கள். எளியவர்களும் ஏராளமான ஆடை கள் எடுக்கக்கூடிய அளவுக்கு மிகக்குறைவான விலைக்கு துணிகள் விற்கப்படும்.

அதனால் தீபாவளிக்கு முந்தைய கடைசி நாளில் ஆடைகள் வாங்க வெளியூர் மக்கள் மட்டுமில்லாது மாநகர பகுதிகளைச் சேர்ந்த அடித்தட்டு எளிய மக்கள் மதுரைக்கு படையெடுப்பர். அதனால் மாநகர காவல் துறையினர் தீபாவளி பண்டிகை வியாபாரம், கடை வீதிகளில் திரளும் மக்களை சிறப்பு கவனம் எடுத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் இரவு முழுவதும் ஈடு படுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் தேவர் ஜெயந்தி தினம் வரு கிறது. அன்றைய தினம் விஐபி-க்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பொதுமக்களும் கோரிப்பாளை யத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவர். வழக்கமாக தேவர் ஜெயந்தியன்று மாநகர காவல்துறையினர், போக்குவரத்தையும், ஊர்வலத் தையும் தடையின்றி செல்லும் வகையில் பணியில் ஈடுபடுவார்கள்.

ஆனால், இந்த ஆண்டு அந்த நாளில் தீபாவளி பண்டிகை கடைசி வியாபாரமும் சேர்ந்து கொண்டதால் தேவர் ஜெயந்தி விழாவுக்கும், தீபாவளிக்கு முன்தின வியாபாரத்துக்கும் திரளும் கூட்டத்தை காவல்துறையினர் சமாளிப்பது சவாலானது.

இதுகுறித்து மதுரை விளக்குத்தூண் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரையில் குறிப்பாக விளக்குத்தூண், நேதாஜி சாலை, மாசி வீதிகளில் நடை பெறும் தீபாவளி முன்தின விற்பனை என்பது சுற்றுவட்டார மாவட்டங்களில் பிரசித்தி பெற் றது. நள்ளிரவு வரை மிகக் குறைந்த விலையில் விற்பனை யாகும் அனைத்துவித பொருட் களையும் வாங்க உள்ளூர் மக்கள் மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களிலிருந்தும் சாதாரண மக்கள் அதிகளவில் கூடுவர்.

கடைவீதிகளில் நடக்க இடமில்லாத அளவு வியாபாரிகளும், நுகர் வோரும் குவிந்திருப்பர். தேவர் ஜெயந்தியும் உற்சாகமாக கொண் டாடப்படும். 2 நிகழ்வுகளும் ஒரே நாளில் வருவதால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இதனால் அண்டை மாவட்டங்களிலிருந்து தீபாவளிக்கு பொருட்கள் வாங்க குடும்பத்தினருடன் வருபவர்கள் தயங்கி, இந்த ஆண்டு மதுரை வருவதை தவிர்க்க வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டுதோறும் அந்த ஒருநாள் விற்பனையை நம்பி இருக்கும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே இதனை தவிர்க்க காவல்துறையினர் உரிய பாது காப்பு மற்றும் போக்குவரத்து திட்டமிடல்களை மேற்கொள்வதுடன், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிப்புகளையும் வெளியிட்டு பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளாக நள்ளிரவு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகளை தளர்த்தி, இரவு முழுவதும் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

x